அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளால், இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து
விவாதிக்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, புதிய வரி தொடர்பான அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, மனோ கணேசன், ஜீவன் தொண்டமான், தயாசிறி ஜயசேகர, டி.வி. சானக, சாணக்கியன் இராசமாணிக்கம், ரவி கருணாநாயக்க, ரிஷாத் பதியுதீன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்மொழிவுகள் மற்றும் இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் சமர்ப்பித்த முன்மொழிவுகளை ஒன்றிணைத்து மேலும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.