மட்டக்களப்பில் வைத்து முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் பிரதி அமைச்சருமான
பிள்ளையான் கைது செய்யப்பட்டமை பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்ட போதிலும், அவர், 2006ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்திக் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்று பொலிஸார் மட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது.
குற்றம் இழைத்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், உண்மை அம்பலப்படுத்தப்பட வேண்டும், பொறுப்புக் கூறல் நிலைநாட்டப்பட வேண்டும் என்பவை எல்லாம் தொடர்பில் இரண்டுபட்ட கருத்து இல்லை. அதுவும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தி, நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் என்றால், இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அவற்றை மூடி மறைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை உருவாக்கி விட முடியாது.
ஆனால் கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை உட்பட அது போல பல்லாயிரம் சம்பவங்கள் இப்படி இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. பல நூற்றுக்கணக்கில் மக்கள் தங்கள் உறவுகளை இராணுவத்திடம் நேரடியாகக் கையளித்த பின்னர் அவர்கள் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்த விடயங்கள் உட்பட இவ்வாறு காணாமலாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கானோரின் கதைகள் காத்திருக்கின்றன. அத்தகைய பலவற்றுக்குக் கண்கண்ட சாட்சியங்கள் தாராளமாக இருக்கின்றன. ஆனால், அவை எவை தொடர்பிலும் இதுவரை இருந்த எந்தச் சிங்கள அரசுகளும் - இப்போது இருக்கின்ற அனுர அரசு உட்பட - சரியான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூட இல்லை.
சட்ட விலக்களிப்பு என்ற விசேட உரிமை இது விடயத்தில் சம்பந்தப்பட்ட குற்றங்களை இழைத்த தரப்புகளுக்குக் கண்மூடித்தனமாக வழங்கப்பட்டு வருகின்றது. அதிலிருந்து வெளிப்பட்டு, நடவடிக்கை எடுப்பதற்கு அநுரா அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதுதான்.
ஆனால் அது, தெரிவு செய்யப்பட்ட ஓரிரு சம்பவங்களுடன் அடங்கிவிட முடியாது. அடங்கிவிடக் கூடாது. அதுவும், தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவின் கட்சியையும் அவரையும் மோசமாக விமர்சித்த ஒருவருக்கு எதிராக மட்டும் சட்டம் தனித்துப் பாயத்தக்க விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவது என்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒன்றாகவே கருதப்படும்.
யுத்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட கொடூரங்களின் விடயத்தில் லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட போன்ற சிங்கள ஊடகவியலாளர்கள் விவகாரத்தில் மட்டும் நடவடிக்கை எடுக்கும் தென்னிலங்கையின் கண்பூச்சு நடவடிக்கை போலவே, இந்த விடயத்திலும் ஓரிரு வரை மட்டும் இலக்கு வைத்து, நடவடிக்கை எடுக்காமல், இது போன்ற பல நூற்றுக்கணக்கான வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க அநுர அரசு தயாராஎன்பதுதான் கேள்வி.
திருகோணமலை நகரக் கடற்கரையில் ஐந்து மாணவர்கள் படுகொலை, 'அக்ஷன் ஃபார்ம்' ஊழியர்கள் 17 பேர் படுகொலை, 11 இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காகக் கடத்தப்பட்டு, பணயக் கைதிகளாக்கப்பட்டு, பின்னர் காணாமலாக்கப்பட்டமை போன்றவை தொடர்பான பல நூற்றுக்கணக்கான குற்றச்சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் காத்திருக்கையில், ஓரிரண்டு விடயங்கள் குறித்து மட்டும் அநுர குமார அரசு துள்ளிக்குதிப்பது அதன் அரசியல் உள்ள நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றது.
ஈஸ்டர் குண்டு தாக்குதலின் ஆறாம் ஆண்டு நினைவு நாள், அடுத்த 21ஆம் திகதி வருகிறது. அதற்கு இன்னும் பத்து நாள்கள்தான் உள்ளன. அதற்கு முன்னர் இந்த விடயத்தில் தவறு இழைத்த - குற்றம் புரிந்த - பிரதான சந்தேகநபர்களைக் கைது செய்து விட முடியும் என்று அந்த குண்டு தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமுதாயத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவும் அவரது அரசுத் தரப்பினரும் உறுதி கூறியிருக்கின்றனர்.
பத்து நாள்களுக்குள் அதைச் செய்தாக வேண்டும். அதற்கு யாருடைய தலையை உருட்டப் போகிறார்களோ தெரியவில்லை.....!
-முரசு