ரணில் - ராஜபக்ஷ கூட்டணியுடன் இணைந்து கடத்தல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முன்னாள்
இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “கிழக்கில் உள்ள அனேகமான புத்திஜீவிகள் காணாமல் போயுள்ளனர். இவ்வாறான கடத்தல்களின் சூத்திரதாரியாக கருதி பிள்ளையான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி அப்போதைய அரசாங்கத்துடன் இணைந்து பல குற்றங்களை பிள்ளையான் செய்துள்ளார்” என்றார்.
மேலும், “ரணில் - ராஜபக்ச கூட்டணியுடன் இணைந்து கடத்தல் குற்றச்சாட்டுக்களிலும் ஈடுபட்டுள்ளார். அவ்வாறான ஒரு சூத்திரதாரி இந்த உயரிய சபையிலும் இருந்துள்ளார். யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கு இவர்கள் போன்றோர் எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை. இது போலவே பலரால் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது அதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை எமது அரசாங்கம் முன்னெடுத்தள்ளது” என்றார்.