அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை மற்றும் அதன் விளைவாக நாட்டைப் பாதித்த
பிரச்சினைகள் குறித்து, இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசாங்கம் ஒரு தீர்வைக் கோரியதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான ஏற்றுமதிகள் ஆடைத் துறையில் தங்கி இருப்பதால், அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கையால் நாட்டின் ஆடைத் தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் தொடர்புடைய இறக்குமதி வரிக் கொள்கை பொருந்தும் என்று அமைச்சர் விளக்கினார்.
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை மற்றும் அதன் விளைவாக நாட்டைப் பாதித்த பிரச்சினைகள் குறித்து, இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசாங்கம் ஒரு தீர்வைக் கோரியதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரியினால் நாட்டின் ஏற்றுமதி துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் இன்று கலக்கமடைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“இத்தருணத்தில் உலகம் ஏற்றுக்கொள்ளும் ஒழங்கில், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு சிறந்த மற்றும் வலுவான அடித்தளமாக அமைந்திருக்க வேண்டும். கம்யூனிச சீனா, வியட்நாம் மற்றும் முதலாளித்துவ நாடுகள் மற்றும் சோசலிச நாடுகள் என சகல நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன.
“ரணசிங்க பிரேமதாச அவர்கள் 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தை அன்று ஆரம்பித்து வைத்தார். அன்றைய காலத்தில் இந்த வேலைத்திட்டத்தை அவமதித்தவர்கள் இருந்த போதும், இன்று நாட்டின் ஏற்றுமதி துறையில் முன்னணியில் உள்ள துறைகளில் ஒன்றாக இது மாறியுள்ளது.
“ஜனாதிபதி தேர்தலில் சாதனைகளை படைத்து டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். America First என்பதே அவரது தேர்தல் கோஷமாக காணப்பட்டது. அந்தக் கொள்கையின்படி, பல தசாப்தங்களாக அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதனால், அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதித்த நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்து பதிலடியை கொடுத்துள்ளார்.
“இதன் காரணமாக நமது நாட்டின் மீதும் 44% வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச வர்த்தகம் தொடர்பில் விசேட நிபுணத்துவ அறிவு கொண்ட ஒரு குழுவை வாஷிங்டனுக்கு அனுப்பி, அமெரிக்காவின் உயர்மட்ட தரப்புகளோடு உறவுகளை ஏற்படுத்தி, எமது நாட்டிற்கு தீர்வுகளை முன்வைப்பதே பொருத்தமானது என தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல முறை கூறியும் கூட அரசாங்கம் அந்த ஆலோசனைகளை புறக்கணித்து ஆணவமான பதில்களை வழங்கியது.
“அண்மையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உலக நாடுகள் மீதான வரிகளை அறிவித்தார். நாம் அமெரிக்கப் பொருட்களுக்கு 88% வரி விதித்ததால் எம்மீது 44% வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என அரசாங்கம் அறிந்திருந்தும், அது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
“இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்து யோசனைகளை முன்வைத்த போதும் அவற்றுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. இலங்கை நாட்டின் ஏற்றுமதி துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் இன்று கலக்கமடைந்து போயுள்ளனர். ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தை சந்தித்தபோது, அவர்களும் இதனால் வருத்தமடைந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிந்தது.
“ஏப்ரல் 9ஆம் திகதி முதல் இந்த வரிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். இந்த வரி விதிப்பு குறித்து உலக நாடுகள் அமெரிக்காவோடு பேசி வருகின்றன. நமது நாடு இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுத்த பாடில்லை” என குறிப்பிட்டுள்ளார்.