மூன்று நாட்கள் இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு நேற்று (04) இரவு இலங்கை வந்தடைந்த
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் சிங்களம் மற்றும் தமிழில் பதிவுகளை இட்டு வருகிறார்.
அதில், "நான் கொழும்பு வந்துவிட்டேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று எழுதப்பட்டுள்ளது.
நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர்களான சரோஜா சாவித்ரி போல்ராஜ், கிருஷாந்த அபேசேன மற்றும் அனில் ஜெயந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், இலங்கை வாழ் இந்தியர்களும், பிரதமர் மோடிக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பளித்தனர். இது குறித்தும் பதிவொன்றை இட்டுள்ள பிரதமர், ‘கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலுமொரு பதிவில், “சமூக வரவேற்பின்போது மகாபுருஷர் ஸ்ரீமந்த சங்கரதேவ், ஸ்ரீ ஸ்ரீ மாதப்தேவ் ஆகியோரின் சிந்தனைகளின் மொழிபெயர்ப்புகள் இசை தொடர்பான நூல்கள், இந்தியக் கதைகள் மற்றும் பாளி மொழியிலான கீத கோவிந்தத்தின் சில அத்தியாயங்கள் ஆகியவற்றையும் பார்வையிட முடிந்தது. இந்த கலாசார பிணைப்புகள் எப்போதும் செழிக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை பிரதி பலித்த பொம்மலாட்டதினை இங்கு காண முடிந்தது. நளின் கம்வாரி மற்றும் ஸ்ரீ அநுர பொம்மலாட்ட கழகத்தினருக்கு அவர்களது ஆர்வம் மற்றும் ஆற்றலுக்காக எனது பாராட்டுகள்” என்று. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில், தனது பதிவுகளை இட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இந்தியப் பிரதமர்.
இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்காவது இலங்கைப் பயணமாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் இலங்கை வந்துள்ளார். பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து சென்ற பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு விழா, இன்று (05) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.