அமெரிக்காவின் புதிய கட்டணக் கொள்கையின்படி, இலங்கை உட்பட GSP+ சலுகைகளை அனுபவிக்கும்
அனைத்து நாடுகளும் அதை இழக்கும் அபாயம் உள்ளது என்று, அரச நிதிக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஹர்ஷ டி சில்வா கூறுகிறார்.
கொழும்பில் இன்று (04) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவினால் அதிக வரி விதிக்கப்பட்டுள்ள 5 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இலங்கை பொருட்கள் மற்றும் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் இனாம் கஃபூர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்க ஆகியோர், அமெரிக்கா விதித்த கட்டணங்கள் குறித்து அரசாங்கம் அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று கூறினர்.
அமெரிக்கா விதித்துள்ள கட்டணக் கொள்கை குறித்து விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஒரு அரசாங்கக் குழு அமெரிக்கா செல்லவுள்ளதாக சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் கார்மென் மொரேனோவுடன், இன்று, GSP+ என்ற பொதுவான முன்னுரிமை சலுகைத் திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள, பரஸ்பர வரிகளைத் தொடர்ந்து, GSP+இன் முழு பயன்பாட்டை மையமாகக் கொண்டு, இதன்போது விவாதங்கள் நடத்தப்பட்டதாக பிரேமதாச, தமது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளைத் திறக்க ஐரோப்பிய ஒன்றியம் போன்ற கூட்டாளர்களுடன், இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.
GSP+ திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள போதும், இலங்கை அதனை முழுமையாகப் பயன்படுத்துகிறோமா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க கட்டணங்கள் வரும்போது, அபாயங்களை நிர்வகிக்க மட்டுமல்ல, புதிய ஏற்றுமதி வாய்ப்புகளைத் திறக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற கூட்டாளர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, கொழும்பு பங்குச் சந்தை (CSE) விலைக் குறியீடுகள் இன்று (04) இரண்டாவது நாளாக சரிவைக் கண்டுள்ளன.
இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 284.25 புள்ளிகள் சரிந்து 15,373.35 புள்ளிகளாகவும், S&P SL20 விலைக் குறியீடு 101.61 புள்ளிகள் சரிந்து 4,541.71 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்றைய பரிவர்த்தனைகள் ரூ. 3.17 பில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (04) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 301.14 ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206.38 ஆகவும் விற்பனைப் பெறுமதி 215.13 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.16 ஆகவும் விற்பனைப் பெறுமதி 335.08 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381.59 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 395.84 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181.66 ஆகவும் விற்பனைப் பெறுமதி 190.98 ஆகவும் பதிவாகியுள்ளது.