பிங்கிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, பதில் பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்ட
இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பதில் ஐஜிபி நடவடிக்கை எடுத்து உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு எழுத்துபூர்வமாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலைப் பெறாமலும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்குத் தெரிவிக்காமலும், பிங்கிரிய பொலிஸ் பொறுப்பதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ய பதில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பொதுவான முடிவுக்கு மாறாகச் செயற்பட்டுள்ளதாகவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையாளர் நாயகத்தால் 2025.03.03ஆம் திகதியிட்ட LAE/2025/06 என்ற எண்ணைக் கொண்ட சுற்றறிக்கையின் விதிகளுக்கு முரணாக, பதில் ஐஜிபி மேற்கண்ட இடமாற்றத்தைச் செய்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.