உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக,
அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 53 ரிட் மனுக்கள் மற்றும் ஆறு அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
நீண்ட பரிசீலனைக்குப் பிறகு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய சட்டமா அதிபர் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட போது, சட்டமா அதிபரின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்கா டி சில்வா, ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை எழுப்பி, இந்த மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார். அதன்படி, தொடர்புடைய மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு அவர் நீதிமன்றத்தைக் கோரினார்.
நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அறிவித்து, சட்டமா அதிபர் எழுப்பிய ஆரம்பகட்ட ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தனர். அதன்படி, விசாரணைக்காக அழைப்பாணை பிறப்பிக்காமல், குறித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இளம் வேட்பாளர்களின் வயதை உறுதிப்படுத்துவதற்கான பிறப்புச் சான்றிதழைப் பொறுத்தவரை சான்றிதழ் பத்திரத்தின் நிழல் பட பிரதியில் சமாதான நீதிவான் சான்றுரைத்து இருந்தால் அத்தகைய ஆவணத்தை நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவையாகக் கூறப்பட்ட 37 வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு இன்று முற்பகல் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசர் எம்.ரி.முஹம்மட் லபார், நீதியரசர் கே. பிரியங்கா பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
ஆனால் கடந்த நான்கு நாள்களாக இதே போன்ற மனுக்களை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் இதே காரணத்துக்காக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஏற்று அங்கீகரித்து இருப்பதோடு, தேர்தல் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 53 ரிட் மனுக்கள் மற்றும் ஆறு அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் இன்று விசாரிக்காமல் தள்ளுபடி செய்தது.
சமாதான நீதிவான் சான்றுரைத்த பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தின் பிரதியை ஏற்றுக்கொள்ளவும் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் துரைராஜா, மஹிந்த சமயவர்த்தன, சம்பத் அபயக்கோன் ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்தத் தீர்ப்பை இன்று பிற்பகல் வழங்கியது.