சிறு போகத்திற்கான உர மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தவொரு
திட்டத்தையும் தயாரிக்கவில்லை என தேசிய விவசாயிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் அனுராத தென்னகோன் கூறுகையில், விவசாயிகள் தங்கள் பயிர்ச்செய்கை பணிகளை ஆரம்பித்திருந்தாலும், இதுவரை உர மானியம் வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.
இது தொடர்பாக அத தெரண செய்தி சேவை, விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் யூ. பி. ரோஹன ராஜபக்ஷவிடம் வினவியபோது, அவர் கூறுகையில், உர மானியம் வழங்குவதற்கான சுற்றறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
"சிறு போகத்திற்கான உர மானியத்தை விவசாயிகளுக்கு வழங்குவது, பெரும் போகத்திற்கு சமமாகவே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு ரூ. 5,000 வீதம் முதல் கட்டத்தில் ரூ. 15,000 மும் மற்றும் இரண்டாவது கட்டத்தில் ரூ. 10,000 மும் வழங்கப்படும். அதிகபட்சமாக 2 ஹெக்டேயருக்கு மட்டுமே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
“இதுவரை அதற்கான சுற்றறிக்கையை நாங்கள் வெளியிடவில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அது நடைபெறும் என நினைக்கிறேன். மேலும், விவசாயிகளுக்கு மற்ற பயிர்களுக்காகவும் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 15,000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.