பட்டலந்த அறிக்கை தொடர்பாக ரணில் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை
உண்மைதான். ரணிலைப் பற்றி ஒரு எதிர்மறை பிம்பம் உருவாக்கப்பட்டதும் உண்மைதான். இருப்பினும், முன்னிலைக் கட்சியினர் இந்த அறிக்கையை சுமக்கத் தொடங்கியதும், அது மிகவும் தீவிரமாகிவிட்டது.
அதன்படி, குமார் குணரத்னம், புபுது ஜாகொட, துமிந்த நாகமுவ, சேனாதீர குணதிலக்க போன்ற முன்னிலைக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், தற்போது திசைக்காட்டி அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தத்தை பிரயோகித்து வருவதையும், பட்டலந்த அறிக்கையை முன்னிலைப்படுத்தி, ரணிலின் குடியுரிமைகளை ரத்து செய்து, அவரை தண்டிக்கக் கோருவதையும் நாம் காணலாம்.
இதற்கிடையில், 1987, 1988 மற்றும் 1989 கிளர்ச்சிகளில், ஜேவிபியில் சேர்ந்து இப்போது ஜேவிபியை விட்டு வெளியேறிய ஒரு பெரிய குழுவினர், தற்போதைய அரசாங்கம் பட்டலந்த சித்திரவதைக் கூடத்தை நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ரணிலைத் தண்டிக்கவும், கொலை செய்யப்பட்ட தங்கள் சகோதரர்களுக்கு நீதி நிலைநாட்டவும் எதிர்பார்க்கின்றனர்.
ரணிலைப் போன்றே, ஜேவிபியையும் இந்த அறிக்கையைக் கொண்டு சுவரில் சாய்க்க, முன்னிலைக் கட்சியினர் முயற்சித்து வருவதாகத் தெரிகிறது. இருந்தாலும், பட்டலந்த விசாரணைக்கான அரசாங்கத்தின் அணுகுமுறையைப் பாராட்டி, விவாதத்தில் இணைந்துகொண்டன. ஆனால் அவை, கடுமையான விமர்சனங்களைக் கொண்டுவந்தன.
"இது ஒரு நல்ல தொடக்கம். ஆனால், அது தொடங்கியிருக்க வேண்டிய இடம் இப்போதல்ல. இலங்கை முழுவதும் நூற்றுக்கணக்கான சித்திரவதைக் கூடங்கள் உள்ளன. அங்கு இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவற்றில், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம், யட்டாரோ வளாகம், காலியில் உள்ள பூஸா முகாம் மற்றும் மாத்தறையில் உள்ள எலியகந்த சித்திரவதைக் கூடம் ஆகியவை அடங்கும். அவை பற்றியும் நாம் விசாரிக்க வேண்டும்.
“அதற்கெல்லாம் முன்னதாக, எங்கள் கட்சியின் அன்புக்குரிய தலைவர் ரோஹண விஜேவீர உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க ஒரு சிறப்பு ஆணைக்குழு நியமிக்கப்படும் என்று அவர்கள் கூறினர். எல்லாவற்றுக்கும் முதல் அதைச் செய்ய வேண்டும்” என்று முன்னிலைக் கட்சியினர் தெரிவித்திருந்தாலும், அதற்கு மாற்றீடான மற்றுமொரு விவாதமும் இருக்கிறது.
"நாங்கள் என்னதான் சொன்னாலும், தோழர் ரோஹண விஜேவீரவின் மரணம் குறித்து விசாரிக்க இந்த அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமிக்காது என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால், தோழர் விஜேவீரவைச் சுட்டுக்கொன்ற ராணுவத் தலைவர்கள் இன்று அவர்களின் முகாமில் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை வெளிப்படுத்த இந்த விசாரணைகள் எதுவும் நடத்தப்படாது.
“எனவே, பட்டலந்த மதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ரணிலுடன் ஒரு காலத்தில் இணைந்து பணியாற்றி, ரணிலுக்கு அரசாங்கங்களை அமைக்க உதவிய இந்தக் குழு, ரணிலுக்கு உரிய தண்டனையை வழங்கும் என்பதில் நமக்கு என்ன நம்பிக்கை இருக்கப்போகிறது?" என்று, முன்னிலைத் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட வலுவான வாதங்களுக்கு, அரசாங்கத் தரப்பிலிருந்து எவராலும் பதிலளிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பட்டலந்த அறிக்கையின் மூலம் பல்வேறு குழுக்கள், அரசியல் ஆதாயங்களைப் பெறத் திட்டமிட்டுள்ளன என்பது அனைத்துத் தரப்பிலிருந்தும் தெளிவாகத் தெரிகிறது. அரசாங்கம் அதைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும்போது, ரணில் தனது கைகளிலிருந்து தூசியைத் துடைப்பது போல் தெரிகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. பட்டலந்த குறித்த இரண்டு நாள் விவாதத்தை நடத்த, அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வேறு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். தேர்தலின் நடுவில் இந்தப் பிரச்சினையை விவாதிப்பதற்குப் பதிலாக, தேர்தலுக்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு இது குறித்து விவாதிக்கலாம் என்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.
ஆனால், அரசு தரப்பு, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஏப்ரல் 10-ம் திகதியன்று பாராளுமன்றத்தைக் கூட்டி, ஒரு நாள் விவாதம் நடத்த வேண்டும் என்றும், மே மாதத்தில் மற்றொரு நாளை அதற்காக ஒதுக்கலாம் என்றும் அரசாங்கம் கூறியது. அதாவது புத்தாண்டை மனதில் கொண்டு பாராளுமன்றம் செயல்படுகிறது.
ஏப்ரல் மாதம் ஜேவிபிக்கு வரலாற்று சிறப்புமிக்கது. 1971 ஏப்ரல் 5-ம் திகதி அதிகாலையில், வெல்லவாய பொலிஸ் நிலையத்தின் மீதான தாக்குதலுடன் தொடங்கிய போராட்டத்தையும், ஏப்ரல் மாதத்தில் 'எங்கள் சகோதரர்களை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்' என்ற மாவீரர்களின் நினைவேந்தலையும் அவர்கள் நினைவுகூர்கிறார்கள். எனவே, மாவீரர் தின நினைவேந்தலில் பட்டலந்தவும் முன்னிலைக்கு வரும் என்று சிலர் கூறுகிறார்கள்.