தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்தின் பாங்கொக் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, பாங்கொக்கில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் இன்று (28) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தாய்லாந்து மற்றும் வியட்நாம் வரை உணரப்பட்டுள்ளது.
தாய்லாந்திலும் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இன்று நண்பகல் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் தற்போது வரை எவ்வித உயிரிழப்புக்களும் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை மதியம் 12:50 மணியளவில் (06:20 GMT) சகாயிங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ (10 மைல்) தொலைவில் 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் இடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலநடுக்கத்தால் பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.