2023ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சில நிமிடங்களுக்கு முன்பு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்மானித்தது.
அதன்படி, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
இத்தகைய பின்னணியில், அவர் இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் ஆஜரான நிலையில், 2023ஆம் ஆண்டு வெலிகமவில் டபிள்யூ 15 உணவகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்படவுள்ளது.