ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்
செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (15) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டில்லி பயணத்தின் போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக, அடுத்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் மோடி இலங்கைக்கு வர உள்ளார். மேலும், அண்டை நாடான இந்தியாவுடன் நாங்கள் நெருங்கிய உறவைப் பேணி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தேசிய நலனைப் பேணுவதற்காகப் பணியாற்றும் போது எங்கள் வெளியுறவுக் கொள்கையில் நாங்கள் நடுநிலையாக இருப்போம் என்றும் ஹெரத் கூறினார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்று திசாநாயக்காவன் முதல் இந்தியப் பயணத்திலேயே இருதரப்பு உறவு குறித்தும், பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையின் போது சம்பூர் சூரிய மின் நிலையத்தைத் திறப்பதுடன் கூடுதலாகப் பல புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2023ஆம் ஆண்டில் கிழக்கு திரிகோணமலையின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையத்தை நிர்மாணிக்க, இலங்கை மின்சார சபையும், இந்தியாவின் அனல்மின் வாரியமும் ஒப்புக்கொண்டிருந்தன.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.