இலங்கையில் பாலியல் குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தை துஷ்பிரயோகம் போன்ற பல சம்பவங்கள்
அறிக்கையிடப்பட்டிருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது கவனம் செலுத்தப்படுகிறது.
இது அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு பெண் மருத்துவருக்கு எதிராக நடந்த பாலியல் குற்றச் செயலுடன் தொடர்புடையது.
கடந்த திங்கட்கிழமை (மார்ச் 10) நடந்த இந்த சம்பவம் குறித்து பலத்த விவாதம் உருவாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் இது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
'மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு இப்படி நடந்தால், மற்ற பெண்களைப் பற்றி பேசுவதில் பயனில்லை'
முன்னாள் அமைச்சரும் மருத்துவருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறுகையில், பணியில் இருக்கும்போது ஒரு பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது கடுமையான விஷயம் என்கிறார்.
இத்தகைய சம்பவங்களுக்கு உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"மருத்துவமனையில் அவசர அழைப்பில் இருக்கும் பெண் மருத்துவருக்கே பாலியல் துன்புறுத்தல் நடந்தால், சாதாரண பெண் குழந்தைகளைப் பற்றி பேசுவதில் எந்த பயனும் இல்லை. பள்ளிகளில் குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சம்பவங்கள் ஏராளம். சட்டத்தை சரியாக அமல்படுத்துவது முக்கியம். இந்த துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக அந்தஸ்தைப் பார்க்காமல் சட்டம் சரியாக செயல்பட வேண்டும். நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் பெரும்பாலும் தாமதமாகின்றன. வழக்கு விசாரணையின் போது, சில சிறிய குழந்தைகள் வயது வந்தவர்களாகிவிடுவதால் சாட்சியம் அளிக்க வராத சந்தர்ப்பங்கள் உள்ளன. அப்போது வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அதனால் குற்றவாளிகள் தண்டனையின்றி செல்கின்றனர். முழு அமைப்பும் சீரமைக்கப்படும் வரை இவற்றைக் குறைக்க முடியாது."
'தண்டனை விரைவுபடுத்தப்பட வேண்டும்'
பணியிடத்தில் பெண் மருத்துவருக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பது கடுமையான சம்பவம் என்று பெண்கள் வள மையத்தின் இயக்குனர் சுமிகா பெரேரா கூறுகிறார்.
சட்டத்தின் அமலாக்கம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"தண்டனை அவசியம். ஆனால் தண்டனைகளால் மட்டுமே இவற்றை நிறுத்த முடியாது. பெண்களுக்கு பாதுகாப்பு தேவை. அதேபோல் இத்தகைய குற்றங்கள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதும் அவசியம். பெண்களை மரியாதையுடன் நடத்தும் சமூகம் நமக்குத் தேவை."
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்'
பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றங்களை ஒடுக்க முதலில் இலங்கையின் சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் அச்சலா செனவிரத்ன சுட்டிக்காட்டுகிறார்.
நாட்டில் போதுமான சட்ட அமைப்பு இருந்தாலும், அவை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
"முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால், இந்த நாட்டில் சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். சட்டம் இருக்கிறது. சட்டம் தெளிவாக உள்ளது. நமது நாட்டின் சட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சட்டம் இருக்கிறது. ஆனால் சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்கள் இருக்கின்றன. அட்டர்னி ஜெனரல் திணைக்களம், பொலிஸ் துறை, அமைச்சுகள் அதற்காக என்ன செய்கின்றன? அவற்றை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்வி. நமது நாட்டில் குற்றவாளிகள் பயப்படாததற்கு முக்கிய காரணம், நமது நாட்டில் சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்கள் ஊழல் நிறைந்தவை. அதனால்தான் குற்றவாளிகள் எந்தக் குற்றத்தையும் செய்ய பயப்படுவதில்லை."
"பெண் பாலியல் வன்புணர்வு மற்றும் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு 'கட்டாயமாக மரண தண்டனை அமல்படுத்தப்பட வேண்டும்'" என்று அவர் வலியுறுத்தினார்.
"இந்தக் குற்றங்களை நிறுத்த, ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே அதற்கான விருப்பம் இருக்க வேண்டும். குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அப்படி இல்லாமல் நமது நாட்டில் பெண் பாலியல் வன்புணர்வை நிறுத்த முடியாது. எனவே, ஒன்று மரண தண்டனை அமல்படுத்தப்பட வேண்டும். நான் சொல்வது என்னவென்றால், பெண் பாலியல் வன்புணர்வு, குழந்தை துஷ்பிரயோகம், கொலை செய்பவர்களுக்கு கட்டாயமாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்காக சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். மற்றொன்று, சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்களில் உள்ள ஊழலை அகற்ற வேண்டும்."
'மரண தண்டனை தீர்வல்ல'
இதற்கிடையே, மரண தண்டனை விதிப்பதன் மூலம் இத்தகைய குற்றங்களை ஒடுக்க முடியாது என்பது மூத்த வழக்கறிஞர் சாலிய பீரிஸின் கருத்தாகும்.
இத்தகைய குற்றங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
உதாரணமாக, மருத்துவ பரிசோதனை அறிக்கைகளைப் பெறுவதற்கான காலத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்னொரு குறிப்பிடத்தக்க பிரச்சினை என்னவென்றால், இலங்கையில் நீதிமன்றங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இலங்கையில் குற்றவியல் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீதிமன்றங்களின் எண்ணிக்கை போதாது. அதேபோல், மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வருவதற்கு பெரும் காலதாமதம் ஆகிறது. அவற்றை மாற்றினால் இந்த நிலைமையை மாற்ற முடியும்," என்று வழக்கறிஞர் சாலிய பீரிஸ் கூறினார்.
இதற்கிடையே, மரண தண்டனை தகவல் மையம் (DPIC) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அமெரிக்காவில் மரண தண்டனை அமல்படுத்தப்படாத மாநிலங்களை விட மரண தண்டனை அமல்படுத்தப்படும் மாநிலங்களில் கொலை விகிதம் அதிகமாக உள்ளது என்பது தெரிகிறது.
சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், இந்த தரவுகளைப் பரிசீலிக்கும்போது, மரண தண்டனை விதிப்பதன் மூலம் குற்றங்கள் குறைகின்றன என்று முடிவு செய்ய முடியாது என்பதாகும்.
அமெரிக்காவில் மரண தண்டனை நடைமுறையில் உள்ள மற்றும் இல்லாத மாநிலங்களின் கொலை விகிதம்
கொலை விகிதம் (100,000 பேருக்கு)
தற்போதைய தண்டனைகள் என்ன?
தற்போதைய சட்ட அமைப்பில் பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்க முடியாது, சிறைத்தண்டனை மட்டுமே வழங்க முடியும்.
இது 7 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகள் வரை ஆகும்.
நீதி அமைச்சரின் அறிக்கை
இந்த சம்பவம் தொடர்பான நீதி நடவடிக்கைகள் குறித்து பிபிசி சிங்கள சேவை நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்காரவிடம் கேள்வி எழுப்பியது.
அவர் கூறுகையில், மருத்துவரின் சம்பவம் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாகவும், அத்தகைய குற்றங்கள் தொடர்பான நீதி நடவடிக்கைகளை துரிதப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.