காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர்
ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில், தலகஹ பகுதியைச் சேர்ந்த அஹங்கம வலவகே சிறிதத் தம்மிக்க, பூஸா சிறைச்சாலையின் உதவி சிறைச்சாலை உதவி அத்தியட்சகராகப் பணியாற்றியபோது, பொடி லெஸ்ஸி என்றழைக்கப்படும் பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் ஒருவரின் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவராவார்.
2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், ஹெராயின் வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு பூஸா சிறையில் அடைக்கப்பட்டிருந்த "போடி லஸ்ஸி" என்று அழைக்கப்படும் அருமஹந்தி ஜனித் மதுஷங்க என்ற பிரபல குற்றவாளியால், சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஒரு வழக்கும் இருந்தது.
சிறைச்சாலை ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் மறுவாழ்வு) ஜனக சந்தன லலித் பண்டார, சிறைச்சாலை ஆணையாளர் (செயல்பாடுகள்) துசித இந்திரஜித் உடுவர, சிறைச்சாலை ஆணையாளர் (புலனாய்வு) விதானகே பிரசாத் பிரேமதிலக மற்றும் நேற்று படுகொலை செய்யப்பட்ட அப்போதைய உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் (பூஸா) அஹங்கம வலவகே சிறிதத் தம்மிக்க ஆகியோருக்கு எதிராக இந்த கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
"என்னைச் சிறையில் அடைத்தாலும், வெளியே என்னுடைய நடவடிக்கைகள் குறையாது. மேலும், பூஸா சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் முதல் எந்தவொஐரு தலையெழுத்து மரணம்தான்" என்று கூறி, பொடி லஸ்ஸி அப்போது உயரதிகாரிகளை பகிரங்கமாக அச்சுறுத்தினார். தன்னை எதிர்த்த சிறைச்சாலை அதிகாரியைக் கொன்றதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், போடி லஸ்ஸிக்கு நான்கு சரீரப் பிணைகளில் பிணை வழங்கப்பட்டது. பின்னர், மற்ற வழக்குகளில் பிணை பெற்ற பிறகு, பொடி லஸ்ஸி இந்தியாவுக்கு தப்பிச் சென்று கடந்த ஜனவரி மாதம் மீண்டும் இந்தியாவில் பிடிபட்டார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கொலை செய்யப்பட்டுள்ளார். அக்மீமன, தலகஹபிட்டியவில் உள்ள அவரது வீட்டில், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் இந்த படுகொலை நடத்தப்பட்ட நிலையில் துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரி சிறிதத் தம்மிக்கவின் அக்மீமன, தலகஹபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில், நேற்று மாலை 4:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பிஸ்டல் வகையைச் சேர்ந்த துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்து காணப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிதாரி அவரது தலைப் பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.
எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
61 வயதான சிறிதத் தம்மிக்க, கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் அதிகாரியாக சில காலம் பணியாற்றியிருந்தார்.
அங்கு பணியாற்றிய காலத்தில் அவருக்கு பாதாள உலகக் கோஷ்டிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக, அக்மீமன பொலிஸார் உள்ளிட்ட நான்கு பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
பாதாள உலகக் கோஷ்டித் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை முகாம்களில் பணியாற்றிய பின்னர் கொலை மிரட்டல்களைப் பெற்ற சிறை அதிகாரிகள், இந்த முறையில் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டிருப்பது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.