நாளை (05) முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நாடளாவிய வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க
தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகதபால தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வைத்தியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, வைத்தியர்களுக்கான அடிப்படை வேதனம், மேலதிக சேவைக்குக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, வருடாந்த வேதன அதிகரிப்பு, மற்றும் உழைக்கும் போதான வரி செலுத்துவதில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந் நிலையில், பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (05) முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், மருத்துவர்களின் கூடுதல் பணிக்கொடை மற்றும் விடுமுறை கொடுப்பனவுகளில் ஏற்பட்ட வெட்டுக்கள் குறித்து விவாதிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பிற்பகல் அவசர மத்திய குழுவைக் கூட்டியபோதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுகாதார நிபுணர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சனைக்குரிய சூழ்நிலையை தீர்க்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், 6ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ், நாட்டின் முதல் 10 சம்பள விகிதங்களில் ஆசிரியர் அதிபர்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், உதவி மருத்துவ நிபுணர்களை அதிலிருந்து விலக்கியதன் மூலம் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார்.