இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
நாளை மறுதினம் (05) முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், மருத்துவர்களின் கூடுதல் பணிக்கொடை மற்றும் விடுமுறை கொடுப்பனவுகளில் ஏற்பட்ட வெட்டுக்கள் குறித்து விவாதிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பிற்பகல் அவசர மத்திய குழுவைக் கூட்டியபோதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுகாதார நிபுணர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சனைக்குரிய சூழ்நிலையை தீர்க்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், 6ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ், நாட்டின் முதல் 10 சம்பள விகிதங்களில் ஆசிரியர் அதிபர்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், உதவி மருத்துவ நிபுணர்களை அதிலிருந்து விலக்கியதன் மூலம் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார்.
இருப்பினும், கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, தொழிற்சங்கங்கள் தங்கள் தேவைகளை அடைவதற்காக இதுபோன்ற வேலைநிறுத்தங்களை மேற்கொள்கின்றன என்று கூறினார்.
இதற்கிடையில், சுபோதனி குழு அறிக்கையின்படி, ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு உடனடியாக களையப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இடையிலான சம்பள ஏற்றத்தாழ்வு 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகக் கூறினார்.