எதிர்வரும் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினத்தன்று முல்லைத்தீவில் தமது உறவுகளை தேடி
தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வரும் தாம், சர்வதேச நீதியை வலியுறுத்தி வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம் கூறியதாவது,
“கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த நாள் முதல் தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற தாம் 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் இந்த போராட்டம் எதிர்வருகின்ற மார்ச் அதாவது சர்வதேச மகளிர் தினமான அன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாவது ஆண்டில் தொடர் போராட்டமாக தொடர்ந்து வருகின்றது.
“இந்நிலையில், 2923 நாட்களை பூர்த்தி செய்கின்ற அந்த மார்ச் எட்டு சர்வதேச மகளிர் தினத்தன்றில் முல்லைதீவில் தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராடத்தை மேற்கொண்டு வரும் தாம் சர்வதேச நீதியை வலியுறுத்தி வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக” தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த தமது போராட்டத்திற்கு எந்த ஒரு அரசாங்கமும் தீர்வுகளை வழங்காத போது இந்த அரசாங்கமும் அதற்கான தீர்வை வழங்காத நிலையிலே சர்வதேசத்தினுடைய தீர்ப்பை எதிர்பார்த்தவர்களாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே இந்த அரசாங்கம் ஆட்சி பொறுப்பெடுத்ததன் பின்னர் தாங்கள் செய்கின்ற மாபெரும் போராட்டமாக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
அதனால், மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரையும் தமது போராட்டத்திற்கு வருகை தந்து ஆதரவளித்து தமது உறவுகளுக்கான நீதியை பெற்றுத்தர அனைவரும் அணி திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.