ஐக்கிய மக்கள் சக்தியின்
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (13) கொழும்பு கங்காராம விஹாரையில் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ராஜித சேனாரத்னவுக்கும் இடையிலான “ராஜிதவின் தீர்மானம்” உடன்படிக்கையும் இங்கு கைச்சாத்திடப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தன்னைப் போன்று தீவிரமான தீர்மானங்களை எடுக்க விருப்பமுள்ளவராகவே ராஜித சேனாரத்ன தன்னுடன் இணைய தீர்மானித்ததாக தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இங்கு உரையாற்றிய ராஜித சேனாரத்ன, ரணிலுக்கு இன்னும் 5 வருட கால அவகாசம் வழங்கப்படுமாயின் இலங்கை உலகின் நவீன நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்தார்.
மக்களின் நலன் கருதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக தெரிவித்த ராஜித சேனாரத்ன, எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி நாட்டின் நிரந்தர ஜனாதிபதியாக ரணில் பதவியேற்பார் என்பதில் சந்தேகமில்லை எனவும் தெரிவித்தார்.