மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற

பல்வேறு நோய்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் Benzoic Acid கலந்து தயாரிக்கப்பட்ட மாசிச் சம்பல் கல்முனை பிராந்திய சந்தைகளிலும் கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒரு தொகை மாசிச்சம்பல் அண்மையில் சம்மாந்துறை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டது.
 
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்தியத்தில் உள்ள சகல உணவு கையாளும் நிறுவனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
இந்த வகையில் சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போதே குறித்த மாசிச்சம்பல் கைப்பற்றப்பட்டது.
 
கைப்பற்றப்பட்ட மாசிச் சம்பலின் மாதிரிகளை பரிசோதனைக்காக இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அதில் Benzoic Acid அதிகமாகக் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து மாசிச் சம்பலை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது. 
 
குறித்த மாசிச் சம்பல் கல்முனை பிரதேசத்தில் தயாரிக்கப்படுவதாகவும்  அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் விற்பனைக்காக விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 
 
மாசிச்சம்பல் தயாரிக்கும் நிறுவனத்தை பரிசோதிக்கவும், விற்பனைக்காக விடப்பட்டுள்ள மாசிச்சம்பலினை மீளக் கைப்பற்றுவதற்குமான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
Benzoic Acid கிட்னி பாதிப்பு மற்றும் புற்று நோயை ஏற்படுத்தக் கூடியதுடன் மனித உடலில் பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தக் கூடியது. 
 
எனவே இந்த மாசிச்சம்பலை உண்பதிலிருந்து தவிர்ந்துக் கொள்ளுமாறும், விழிப்பாக இருக்குமாறும்  சுகாதார தரப்பினர் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி