மற்றைய தலைவர்கள் ஓடுவதற்கு

சப்பாத்து தேடிக்கொண்டிருந்த வேளையில் ​​நான் செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்டேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசியலை ஒதுக்கிவிட்டு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
 
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ருவன்வெல்ல இல்லத்தில் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறினார். 
 
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியுடன், நாட்டின் அரசியலும் வீழ்ச்சியடைந்துள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, முதன்முறையாக அரசியலில்லாத அரசாங்கம் உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
 
தற்போது மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தாலும் நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
 
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், பெருந்திரளான பிரதேச மக்களும் இதில் கலந்து கொண்டனர்.
 
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில் பாதையின் இருமருங்கிலும் கூடியிருந்ததோடு மக்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். 
 
இதேவேளை, ருவன்வெல்லவிலுள்ள தனது கொள்ளுப்பாட்டியின் வளவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றிருந்ததோடு அங்கு சிறிது நேரத்தை களித்தார். 
 
முன்னதாக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறுகையில், 
 
"வங்குரோத்து அடைந்துவிட்டாதாக அறிவித்திருக்கும் அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வாறு இந்தளவு சலுகைகளை வழங்க முடியும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உறுமய, அஸ்வெசும,அரிசி மானியம் வழங்கும் திட்டங்கள் நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தபோது ஏன் செயற்படுத்தப்படவில்லை என்றும் கேட்கிறார்கள். 
 
அதேபோல், அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கினோம். 2015இற்குப் பிறகு இவ்வாறான சம்பள உயர்வு வழங்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். எனவே, இந்த நிவாரணங்களை அரசாங்கம் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்போகிறது என்ற கேள்வி காணப்பட்டது. 
 
மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்த ஒரு நாட்டை நாங்கள் பொறுப்பேற்றோம். ஏனைய தலைவர்கள் ஓடுவதற்கு சப்பாத்து தேடிக்கொண்டிருந்த வேளையில், ​​நான் செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றேன். 
 
அது மட்டுமன்றி, சரியான கொள்கையின்படி செயற்பட்டோம். அதனால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுத்தோம். இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப மிகவும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. வரி அதிகரிப்பு இலகுவானதாக இருக்கவில்லை. ஆனால் அது மட்டுமே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரே வழியாக விளங்கியது. 
 
அடுத்தபடியாக நாட்டில் முதன்முறையாக இலங்கையில் கட்சி அரசியல் இல்லாத அரசாங்கத்தை அமைத்தோம். அதற்குள் சகல கட்சிகளும் அங்கம் வகித்தன. கட்சிப் பிளவுகள் இருக்கவில்லை. திறமை மற்றும் நம்பிக்கையை மாத்திரமே நம்பி செயற்பட்டடோம். இல்லையெனில், இந்த ஜனநாயக முறைமையில், ஒரே ஒரு ஆசனம் இருந்த கட்சியிலிருந்து ஜனாதிபதி பதவிக்கு வந்திருக்க முடியாது. எனவே நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைவரிடத்திலும் கோரிக்கை விடுத்திருந்தேன். 
 
ஒரு சிலர் அதற்கு முன்வரவில்லை. முடிந்தளவில் நான் எல்லோரையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்னோக்கிச் சென்றேன். முதன்முறையாக அரசியல் சாராத அமைச்சரவையொன்று அமைக்கப்பட்டது. கட்சி பேதமின்றி நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
 
 குறுகிய மனப்பான்மை இன்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் இன்னும் மீளவில்லை. எரிபொருளும் உரமும் கிடைத்தாலும் நல்ல விளைச்சல் கிடைத்தாலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் நாம் முழுமையாக விடுபடவில்லை.
 
இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் வங்குரோத்து நிலையில் இருந்து மீளக்கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால் அது போதாது. நமது நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே எமது பொருளாதார இலக்குகளின்படி சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமாயின், திட்டமிட்டபடி செயல்பட வேண்டும். எனவே நாம் அனைவரும் இந்த நேரத்தில் அரசியலை ஒதுக்கி வைத்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து செய்தது போல், நாம் அனைவரும் ஒன்றாக இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்.
 
அரசியலை தனியாக வைத்துவிட்டு நாட்டிற்காக ஒன்றுபடுவோம். பழைய அரசியல் முறைமையால் நாட்டை முன்னேற்ற முடியாது. இந்த நாட்டின் இளைஞர்களுக்கான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். எனவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்பி, முன்நோக்கிச் செல்ல அனைவரும் முன்வாருங்கள்." என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி