பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்வைத்த மின்சார
திருத்தச் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அவதானிப்புகள் குறித்து நோக்கும் போது ஒட்டுமொத்தமாக இந்தச் சட்ட மூலத்தில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. எனவே இதனை நிறைவேற்ற 2/3 பெருன்பான்மை தேவைப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்திற்கு 2/3 பெரும்பான்மை இல்லை. இந்த சட்டமூலத்தை வியாழக்கிழமையே கொண்டு வராமல் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகளையும் பரிந்துரைகளையும் உரிய முறையில் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளத் தக்க விதத்தில் இச்சட்ட மூலத்தை முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சார திருத்தச் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்ததன் பின்னர் கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் அவதானிப்புகளைப் புரிந்து கொண்டு, இந்நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை எவ்வாறு வினைத்திறனுடன் வழங்குவது மற்றும் மின்சாரத் துறையை நட்டம் இன்றி எவ்வாறு இலாபமீட்டும் முறையில் முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இக்குறைபாடுகளை களைய வேண்டும் என்பதனால், இதை வியாழன் அன்று எடுத்துக் கொள்ளாமல், மேற்கொண்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தம்முடைய Blue Print பொருளாதாரத் திட்டத்தில் விற்பனை பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்நாட்டின் நுகர்வோருக்கு நியாயமான முறையில், குறைந்த விலையில் மின்சாரம் வழங்கும் உரிமை உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். எனவே இந்த திருத்த சட்டமூலத்தை சட்டவிரோதமாக நிறைவேற்ற முயற்சித்தால் இதனை தோற்கடிப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.