அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் வாள்வெட்டுக் குழு ஒன்று வீடு ஒன்றில் நுழைந்து இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி வீட்டையும் சேதமாக்கியதோடு, வீதியில் சென்றவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது வாள்வெட்டு குழுவினருக்கும் வாச்சிக்குடா பிரதேசத்தைச் இளைஞர் ஒருவருக்கும் இடையே மரண வீடு ஒன்றில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த இளைஞனை பழிவாங்குவதற்காக சம்பவதினமான நேற்று இரவு 7.30 மணியளவில் வாள் வெட்டுக் குழுவைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டடோர் மோட்டர் சைக்கிள்களில் வாள்களுடன் அவரை தேடி சென்ற நிலையில், அவர் அங்கு இல்லாத நிலையில், அந்த பகுதியில் வீதியில் வந்த அந்த இளைஞரின் நண்பன் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடி அவரது சகோதரியின் வீட்டினுள் புகுந்துள்ளனர்.
இதனையடுத்து அவரைத் துரத்திச் சென்ற வாள் வெட்டுக்குழு அவரின் சகோதரியின் வீட்டின் பொருட்களை சேதப்படுத்தி அந்த இளைஞர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
இதனை தடுக்கச் சென்றவர்கள் மீதும் வாளால் வெட்டுத் தாக்குதல் நடாத்தினர்.
மேலும், இந்த வாள்வெட்டு குழுவினர் வீதியால் சென்றவர்கள் மீதும் வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட குழு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலை மேற்கொண்ட வாள்வெட்டுக் குழுவினர் அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிடத்துக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளதாகவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.