நாமனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல் நடந்து கொள்வோம்
. நாம் இனம், மதம் என்று பிரிந்திருந்தாலும், ஒவ்வொரு இனத்தையும் ஒவ்வொரு மதத்தையும், சகலரினதும் கலாச்சாரத்தையும் மதித்து செயல்பட வேண்டும். தனித்துவத்துக்கு மரியாதை செலுத்துவோம். இதற்கு இடமளிப்போம். நாமனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி, நாம் அனைவரும் இலங்கையர் என்ற வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னோக்கி பயணிக்க வேண்டும். சமூகத்தில் உயர் குடிமகன், தாழ்ந்த குடிமகன் என்ற இரு பிரிவினர்கள் இல்லை. என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சகல இனத்தையும், ஓவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு இனத்திற்கும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையும் சமமான இடம் உண்டு. இலங்கையர் என்பது மிகப்பெரும் பலம் என்ற எண்ணப்பாட்டுக்கு வந்து, வங்குரோத்து நிலையில் இருக்கும் இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க, வறுமை அதிகரித்துள்ள நாட்டில், வேலை வாய்ப்புப் பிரச்சினைகள் அதிகரித்துள்ள நாட்டில், பொருளாதார வளர்ச்சி ஸ்தம்பித்துள்ள எமது நாட்டில், வறுமையை இல்லாதொழித்து, தொழில்வாய்ப்புகளை உருவாக்குவோம்.
பொருளாதாரத்தை நாம் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம். ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சிப் பாதையை நாமனைவரும் இணைந்து உருவாக்குவோம். தகவல் தொழிநுட்ப ஏற்றுமதித்துறைக்கு முன்னுரிமை வழங்குவோம். Information Technology Exports க்கு முன்னுரிமை வழங்குவோம். Manufacturing Industries துறையை கட்டியெழுப்ப நாமனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். எனவே இந்த பணியில் எங்களுடன் இணையுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 204 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், திருகோணமலை, மூதூர், இலங்கைத்துறைமுகத்துவாரம் இந்துக் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 27 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
ஸ்மார்ட் கல்வியின் மூலம் ஸ்மார்ட் இளைஞர்களையும், ஸ்மார்ட் நாட்டையும் உருவாக்கவே பிரபஞ்சம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியை மையமாகக் கொண்ட கல்விக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சில அரசியல்வாதிகள் சில பகுதிகளுக்கு சென்று சிங்களம் மட்டும் என கூறுகின்றனர். இன்னும் சிலர் தமிழ் மட்டும் என பேசி, தங்கள் வாக்குகளை சுருட்டிக்கொள்கின்றனர். இதன் பயன் அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே சென்றடைகின்றன. நாட்டில் உள்ள 41 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இதனால் நன்மையடையாத காரணத்தினால், ஆங்கில மொழிக் கல்விக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
ஆங்கில மொழியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை முன்னெடுக்க வேண்டும். ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேலும் ஊக்குவிப்பதன் மூலம், பட்டம் பெற்ற பின்னரும் அல்லது பரீட்சைகளில் தேர்ச்சி பெற்ற பின்னரும் வேலைவாய்ப்புகளை தேடி அரசியல்வாதிகளின் பின்னால் கடிதங்களை எடுக்கச் செல்லும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சொந்த அறிவு ஆற்றல் திறமையைக் கொண்டு தொழிலை பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.