பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீனின் அறிவுறுத்தலுக்கமைய, பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம்.பெளஷாத் பங்களிப்புடன் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவு நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அவை அழிக்கப்பட்டது.
குறித்த தினம் 65 உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனை செய்யப்பட்டு அதில் 8 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுரை ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இந்தச் சோதனையின்போது, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.இஸ்மாயில் உட்பட சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.