தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி 

ஜனாதிபதிகள் பலரும் பதவிக்கு வந்தாலும் எவரும் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொறுப்பை ஏற்க அஞ்சிய நபர்கள் தற்போது ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு பயந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு 'உறுமய' காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது: இன்றைய தினம் வன்னிப் பிரதேச மக்களுக்கு மிக முக்கியமான தினமாகும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு அநாதரவான நிலையில் இருந்தது. நாட்டைப்பொறுப்பேற்க முன்வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்ட போதும் எவரும் முன்வரவில்லை. நாட்டை பொறுப்பேற்று மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கைக்குக் கொண்டு செல்ல யாரும் தயாராக இருக்கவில்லை. அன்றைய தினம் தனியொருவராக நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதே போல இன்று நாட்டை பொறுப்பேற்கத் தவறியவர்கள் போஸ்டர் ஒட்டுகிறார்கள். கூட்டம் நடத்துகிறார்கள். சிவப்பு நிறத்தில் எல்லா இடத்திலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.

அன்று போஸ்டர் ஒட்டாமலும் கூட்டம் நடத்தாமலும் நாட்டை பொறுப்பேற்றிருந்தால் அவர்களுக்கு எவ்வளவோ விடயங்களை சாதித்திருக்கலாம். ஆனால் அவர்களால் எதனையும் சாதிக்க முடியாது. அதற்கான ஆளுமை ரணில் விக்ரமசிங்கவிடம் மாத்திரமே உள்ளது.

20 இலட்சம் பேருக்கு காணி உறுதி வழங்குவது இலகுவான விடயமல்ல. வன்னி மண் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டது. ஜனாதிபதியின் உறுத்து திட்டத்தினால் எமது மக்கள் தான் அதிகம் பயனடைய இருக்கிறார்கள்.குறிப்பான வவுனியா,மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் அதிகம் பயனடையும்.

எத்தனையோ ஜனாதிபதிகள் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறிக் கொண்டு அரியாசனம் ஏறிய அவர்கள் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

எத்தனையோ சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி ரணில் நடத்தியிருக்கிறார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட அது தெரியும். அதில் முன்னேற்றமும் காணப்பட்டுள்ளது. கடந்த பொங்கல் தினத்திற்கு முந்தைய தினத்தில் வவுனியா மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்திருந்தார். வவுனியா,முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கங்கள் வன வளத் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தப்படுவது குறித்து எடுத்துரைத்தோம். எமது மூதாதையர் காலத்தில் விவசாயம் செய்த காணிகளுக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு எந்த ஜனாதிபதி தீர்வு பெற்றுக் கொடுத்தார். ஒருவரும் இல்லை. நான்,இராஜாங்க அமைச்சர் மஸ்தான் மற்றும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு கையகப்படுத்தப்பட்ட காணிகைள் அனைத்தையும் விடுவிப்பதாக தெரிவித்தது யார்? காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது யார்? ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் வனவள திணைக்களத்துடன் கலந்துரையாடி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்.

வவுனியா,மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான காணிகள் இப்பொழுது கூட விடுவிக்கப்படுவதற்குத் தயாராக இருக்கின்றன. இருந்தாலும் மன்னார் மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேஸ் பெற வரிசை, அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிசை என பல கஷ்டங்களை எமது மக்கள் அனுபவித்தார்கள். வெளிப்படையாகச் சொன்னால் பாணுக்குக் கூட வரிசையில் நின்றோம். அந்த நேரம் ஒரு இராத்தல் பாண் கிடைக்காதா என்று ஏங்கினோம். கட்டட புனரமைப்பிற்கு அடிக்கல் நாட்டி விட்டு வீட்டுக்குள் பதுங்கிக் கிடக்கும் சூழ்நிலை எமக்கு ஏற்பட்டது. ஆனால் இன்று வீதிகள் புனரைக்கப்படுகின்றன. காணிகள் விடுவிக்கப்படுகின்றன. குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. இவையெல்லாம் நடக்கும் என்று நாம் எண்ணிப் பார்த்தோமா? இல்லை.ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் சாதித்துக் காட்டியவை இவை.

எமது மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் காணிகளை நவீனமயமாக்கப்பட்ட விவசாயித்திற்கு உள்வாங்கி மக்கள் அனைவரையில் விவசாயத்தில் முன்னேற்றக் கூடிய ஒரு வேலைத் திட்டத்தை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.

சாம்பல் மேடுகளும் மூடப்பட்ட கடைகளும் புனரமைக்கப்படாத வீதிகளும் ஒரு டொலர் காசு கூட இல்லாத நிலைமையில் இருக்கையில் தான் ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றார். திறைசேரி காலியாக இருந்தது. அன்று புறம் பேசியவர்கள் இன்று ஜனாதிபதியின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சக் கூடிய சூழ்நிலை காணப்படுகிறது.

இரண்டு வருடங்கள் கூட நிறைவடையாத நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். குறுகிய காலத்தில் இந்த மாற்றங்கயை ஏற்பத்தித் தந்த ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்தினால் எமது நாடு நிச்சயம் குறுகிய காலத்தில் சுபீட்சமான நாடாக மாறும்.

வன வள திணைக்களப் பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் பேசும் போது மத்திய தர வகுப்பினரின் காணிகளில் வாழ்பவர்களுக்கு உரிய ஆவணம் வழங்க வேண்டும் என்று நாம் கோரினோம். அந்தக் கோரிக்கை இன்று நனவாகியுள்ளது.

மத்திய தர வகுப்பினரின் காணிகளுக்கு ஆவணம் வழங்குவது தொடர்பான வேலைத்திட்டம் 75 நிறைவடைந்துள்ளது. பட்டதாரிகளுக்க ஆசிரியர் நியமனம், 2 ஆயிரம் கிராம சேவகர் நியமனம் என்பன வெறும் வாய்ப்பேச்சாக அன்றி நனவாகியுள்ளன.

ஜனாதிபதியும் மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைவதால் மாத்திரம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மக்கள் ஒரு சுபீட்சமாக வாழ்க்கையை வாழ வேண்டுமானால் அரச திணைக்களங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். உறுமய திட்டத்திற்காக அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.இதே அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் எதிர்வரும் புதிய வருடம் எமது புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான வருடமாகத் தான் இருக்கும்.

எத்தனையோ ஜனாதிபதிகள் வந்து சென்றார்கள். இராணுவத்தின் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டதா?ஒரு ஏக்கரல்ல ஒரு துண்டுக் காணி கூட விடுவிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணத்திலுமு; முல்லைத்தீவிலும் இராணுவத்தின் வசமிருந்த காணிகள்,கோயில் என்பன இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. இதனைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.இந்தக் குறுகிய காலத்தில் ஜனாதிபதியால் இவற்றையெல்லாம் சாதிக்க முடியும் என்றால் அவரது கரத்தை நாம் பலப்படுத்தினால் நாம் மட்டுமன்றி எமது சந்ததியும் அதன் பயனை அடையும்.

சிலரது போஸ்டருக்கும் சிலரது முறுக்கேரிய பேச்சுக்களுக்கும் நாம் ஏமாறாக் கூடாது. வடக்கு கிழக்கை இணைக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று தமிழ் மக்களின் உரிமையைப் பற்றிபேசுகின்றனர். அனைவரும் ஒன்று திரண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும் " என்றும் அவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....