இக்கட்டான காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்று, நாட்டைச்

சரியான பாதையில் திருப்பியதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுபவர்களே நாட்டை நாசமாக்கி, நாட்டையே வங்குரோத்தாக்கிய நாசகார குடும்ப ஆட்சியின் துணையுடன் என்றுமே அடைய முடியாத நாற்காலியில் ஏறி, நாட்டை அழித்த திருடர்களைப் பாதுகாத்து வருகின்றனர். 

ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குமே இந்நாட்டை நாசமாக்கிய ராஜபக்ஷர்களுடன் எந்த டீலும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் ஒன்றியத்தினர், ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழாத்தினர் எடுத்த நடவடிக்கையினால் நாட்டை அழித்தது யார் என்பதை இன்றளவில் உயர் நீதிமன்றத்தின் மூலம் வெளிக்கொணர்நதுள்ளனர். எனவே, பொய்யான கோப்புக் கட்டுகளை எடுத்துக்கொண்டு திருடர்களைப் பிடிப்பதற்கு அதிகாரம் கேட்க வேண்டிய அவசியமில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ராஜபக்ச குடும்பத்தை வெல்ல வைக்க தாம் ஒருபோதும் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கவில்லை. நாட்டை அழித்த ராஜபக்ச குடும்பத்திற்காக மேடைகளில் ஏறி உரைகளை நிகழ்த்தவில்லை. ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வந்து நாட்டை அழித்த வாய்ச் சொல் தலைவர்கள் தான் இன்று இவ்வாறு 76 வருட வரலாறு குறித்து பேசுகின்றனர்.

விவசாய அமைச்சர்களாகவும், மீன்பிடி அமைச்சர்களாகவும், கலாசார அமைச்சர்களாகவும் செயற்பட்டு, ராஜபக்சர்களின் கைக்கூலிகளாக நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியமைக்கு  இவர்களும் துணை போனார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் அரண் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று(25) பொலன்னறுவையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீர்கெட்ட அரசியல் கலாச்சாரத்திற்கு முடிவு.


நாட்டில் நிலவும் மஜர அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, எம்மிடமுள்ள குறைபாடுகளை களைந்து, உகந்த, உன்னத, தூய்மையான ஆட்சியை நோக்கி நாம் செல்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 ஆடை தொழிற்சாலைகளுக்கும் அப்பால் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ரணசிங்க பிரேமதாச அவர்கள் 200 ஆடைத்தொழிற்சாலைகள் திட்டத்தை நடைமுறைப்படுத்திய போது, ​​வெள்ளையர்களுக்கு உள்ளாடைகளை தைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினர். அந்த தொழிற்சாலைகள் தான் இன்று நமது நாட்டிற்கு டொலர்களை ஈட்டித்தருகின்றன. இத்தொழிற்சாலைகளைத் தாண்டி இலத்திரனியல் சாதனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கிராமத்திற்கு கொண்டு வர வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அர்பணிப்போடு செயற்பட்டு இத்திட்டத்தை முன்னெடுக்கும். இதுவரை வெறும் வாக்குறுதிகளை தந்த எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில் நாம் செயல் வடிவில் சொல்வதை செயலால் நடைமுறைப்படுத்திக் காண்பித்துள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கல்வித்துறையில் நவீனமயமாக்கல் தேவை.

உள்ளோரிடமிருந்து எடுத்து இல்லாதோருக்கு பகிர்ந்தளிப்பதால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என வாய்ச் சொல் தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். கணினி இல்லாத பாடசாலைகளுக்கு கணினி வழங்குவது தவறல்ல. மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை இவ்வாறு நான் பகிர்ந்தளிக்கவில்லை. நவீன தொழில்நுட்பத்தையும் தகவல் தொழில்நுட்ப அறிவையுமே இவ்வாறு பகிர்ந்து வருகின்றேன். இந்தப் புதிய அறிவின் மூலம் 10126 பாடசாலைகள், 41 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். 
சர்வதேச பாடசாலைகளில் உள்ள வசதிகளை நாட்டில் உள்ள அனைத்து 10126 பாடசாலைகளிலும் ஏற்படுத்துவோம். இந்த கல்வி நவீனமயமாக்கல் பல்கலைக்கழக கட்டமைப்பிலும் ஏற்படுத்தப்படும். கல்வி முறையின் அனைத்து துறைகளிலும் மனித வளங்கள் மற்றும் பௌதீக வளங்களின் பற்றாக்குறைக்கு தீர்வுகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். சுகாதாரத் துறையைக் கட்டியெழுப்புவதன் மூலம் வைத்தியசாலை கட்டமைப்பைக் கூட நவீனமயப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

வரலாறு நெடுகிலும் பல்வேறு அரசாங்கங்களின் கீழ், ஜனாதிபதிகள் ஆட்சிக்கு வந்ததன் பின்னரே நாட்டுக்காகப் பணிகளைச் செய்துள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தியும் தானும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே இந்த பணிகளை முன்னெடுத்துள்ளோம். எனவே, ஏனையவர்கள் வழங்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாவிட்டாலும், தாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருப்பதால், அவற்றை நம்பலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரிசி மாபியாவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் விவசாயம் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கு அரச அதிகாரம் தேவை எனவும், அந்த அரச அதிகாரத்தின் ஊடாக அரிசி மாபியா ஒழிக்கப்பட்டு சிறு, நடுத்தர அரிசி உரிமையாளர்களை பலப்படுத்துவோம். உழவுத் தொழில் ஈடுபடும் விவசாயின் நெல் உற்பத்திக்கும் டொலர்களை ஈட்டித்தரும் வேலைத்திட்டம் வகுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயத் துறையானது விதை, உரம், மலிவு விலையில் உள்ளீடுகள் போன்றவற்றின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், விவசாயிகளின் உற்பத்தித் திட்டத்தை வினைத்திறனாக்கத் தேவையான வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நீர்ப்பாசன புனரமைப்பு மற்றும் கால்நடை அபிவிருத்திகளில் கவனம் செலுத்தி,  நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்து, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை தேசிய சந்தைக்கும், ஏற்றுமதிச் சந்தைக்கும் கொண்டு செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை நாம் முன்னெடுப்போம். விவசாயியைப் பாதுகாத்து, அதே வேளையில் உற்பத்தித் தொழில்களுக்கு முன்னுரிமை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

எமது ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தின் பணிகளை மக்கள் நலன் கருதி மாவட்ட செயலங்கள் ஊடாக வினைத்திறனாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....