ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் செய்யக் கூடாத
ஒன்று எனது கைகளால் நடந்து விட்டது என சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சம்பவத்துக்குப் பின்னர் தாக்குதலுக்கு இலக்கான விமான நிலைய போர்ட்டர் இன்னும் வேலைக்குத் திரும்பவில்லை, அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என இது குறித்து அமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது,
அந்த மனிதர் பாவம், அவர் கண்டிப்பாக வேலைக்கு வரவேண்டும் என கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இன்று (17) காலை இராஜாங்க அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி, காலை 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர், ஒரு மணித்தியாலத்தில் வாக்குமூலத்தைப் பதிவு செய்துவிட்டு, முற்பகல் 11.40 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.