நூருல் ஹுதா உமர்
-------------------------------------
 பல்கலைக்கழக ஊழியர்களின் 107 சத வீத  

சம்பள அதிகரிப்பு மற்றும் மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பனவு அதிகரிப்பு குறித்த இரண்டு அமைச்சரவை பத்திரங்களும் அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்படாவிடில் இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஏற்படும் செயலிழப்பின் முழுப் பொறுப்பையும் அரசாங்கமும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் ஏற்க வேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் இன்றுடன் 12 நாட்களாக முன்னெடுக்கும் தொடர் பணி பகிஷ்கரிப்பின் ஓர் அங்கமாக, கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம்  இன்று (13)  மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ஏ.ஜெகராஜு  இதன்போது  கருத்து தெரிவிக்கையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டமானது பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மாத்திரமன்றி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  ஏனெனில், கடந்த 11 நாட்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மட்டுமல்லாது ஆராய்ச்சி, ஆய்வுகூட செயற்பாடுகள், மருத்துவ பரிசோதனைகளும் தடைப்பட்டுள்ளன. பரீட்சைகள், சர்வதேச மாநாடுகள் மற்றும் முக்கிய கூட்டங்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சி நடவடிக்கைகள் தாமதமாகுவதால் இலங்கை பல்கலைக்கழகங்கள், சர்வதேச தரப்படுத்தலில் சவால்களைச் சந்திக்கும் அபாயம் உள்ளது. வைத்திய பரிசோதனைகள் தடைப்படுவதால் நோயாளிகள் அசௌகரியங்களைச் எதிர்நோக்குகின்றனர்.

இதன் காரணமாக அரச பல்கலைக்கழக கட்டமைப்பு சீர்குலைந்து இலங்கையில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் மத்தியில் இங்குள்ள பல்கலைக்கழகங்கள் குறித்து விமர்சனங்கள் உருவாக வாய்ப்பாக அமையும். இது வெளிநாட்டு மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களை தெரிவு செய்வதில் செல்வாக்குச் செலுத்தும்.

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள கோரிக்கையை அமைச்சரவை உபகுழு ஊடாக கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு தீர்வு வழங்குவதாக அரசாங்கமும், அமைச்சரும், உரிய திணைக்களங்களும் பாராளுமன்றத்திலும் நிருவாக ரீதியிலும் கருத்து தெரிவித்தபோதும் அதற்கான எழுத்துமூல உடன்பாடுகளை இதுவரை வெளியிடாமல் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வருகின்றனர். இது பல்கலைக்கழக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வல்ல.

சம்பள திருத்தம் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோதும் அவற்றை பரிசீலிக்க போதிய பணமில்லை எனக் கூறும் அரசாங்கம் சில தரப்புக்கு சம்பள மற்றும் கொடுப்பனவு உயர்வுகளைச் செய்ய எங்கிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டது என்ற கேள்வி எழுகிறது.

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கையானது புதிய கோரிக்கையல்ல. இது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, நிதியமைச்சு, திறைசேரி, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் என்பனவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த 8 வருடங்களாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் பிரச்சினையாகும்.

இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்வேறு பேச்சுவார்த்தைகள், தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை வழங்காது காலம் தாழ்த்தி வருவதன் விளைவே பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களை தொடர் பணி பகிஷ்கரிப்புக்கு இட்டுச் சென்றது.

அரசாங்கமானது இன்றைய அமைச்சரவையில் தீர்க்கமான முடிவெடுத்து உரிய தீர்வு வழங்காதும், இத்தொடர் பணி பகிஷ்கரிப்பைக் கண்டுகொள்ளாதும் விடுமேயானால் இன்று முதல் இப்பகிஷ்கரிப்பு கடந்த நாட்களைவிட இறுக்கமாக்கப்பட்டு, பகிஷ்கரிப்புக்கு மத்தியிலும் மனிதாபிமான அடிப்படையில் எமது ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகளை மட்டுப்படுத்தவும் வலிகோலும்.

இதனால் பல்கலைக்கழக பயிர் மற்றும் விலங்குப் பண்ணை பராமரிப்புகள் பாதிக்கப்படுவதோடு நீர்வழங்கள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை ஊழியர்கள் புறக்கணித்தால் பல்கலைக்கழகங்கள் பௌதீக மற்றும் பொருளாதார ரீதியான இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்க வெளிவாரி கற்கைகள் நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி