நீதியமைச்சர் விஜயதாச ராஜக்பக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை அமுல்படுத்துவதை நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) நிராகரித்துள்ளது.
விஜயதாச ராஜபக்க்ஷ சமர்ப்பித்த மனுவை நீண்ட நேரம் பரிசீலித்ததன் பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரக்கோன் இந்த உத்தரவை அறிவித்தார்.
இந்த உத்தரவை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான விடயங்கள் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு முழுமையான அதிகாரம் இருப்பதாக குறிப்பிட்டார்.
இதனைக் கருத்திற் கொண்டு இந்த வழக்கில் உள்ள விடயங்களில் தலையிட மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிகாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த சீராய்வு மனுவின் நடவடிக்கைகளில் தலையிட வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி, அதனடிப்படையில் விசாரணைக்கு அழைப்பாணை வழங்காமல் உரிய மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.
அண்மையில் அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, மஹிந்த அமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தாக்கல் செய்த முறைப்பாட்டை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிப்பதைத் தடுத்து தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.