முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐந்து
வருடங்களின் பின்னர் நேற்று (06) மாலை கொழும்பு டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு விஜயம் செய்தார்.
இவருடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் பலரும் சென்றிருந்தனர்.
இந்தக் குழுவில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் கட்சியின் செயலாளர் நாடீளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் அடங்குவர்.
தலைமையகத்திலிருந்து வெளியேறும் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கட்சியின் முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில், தான் எப்போதும் கட்சியில் இருப்பதாகவும் ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை விட்டு பிரிந்து சென்றதாகவும் அதன் பின்னர் தான் தலைமையகத்துக்கு வரவில்லை எனவும் தெரிவித்தார்.
கட்சியின் முன்னேற்றத்துக்காக தன்னை அர்ப்பணிப்பேன் என்று கூறிய அவர், நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றார்.