சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் ஜூன் மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர்,
“சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளது. இந்த மீளாய்விற்கமைய ஊழியர்மட்ட இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்றுக் குழுவின் இணக்கப்பாடு இன்னமும் எட்டப்படவில்லை.
“அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு சில நிபந்தைகள் முழுமைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக மாற்றுவது முக்கியமாகும்.
“சர்வதேச கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது மற்றைய நிபந்தனையாகக் காணப்படுகின்றது.
சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கலந்துரையாடலை கருத்திற் கொண்டு இரண்டாவது கலந்துரையாடலை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வௌிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு வருகின்றது” எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதற் தவணை கடன் கடந்த மார்ச் மாதம் கிடைக்கப்பெற்றதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தவணைக் கடன் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகள் சிலவற்றை இலங்கை நிறைவேற்ற தவறியமையால், குறிப்பிட்ட காலத்தில், நீடிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணையை பெற இலங்கை தவறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.