“யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான
எம்.ஏ.சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி விடுக்கவில்லை” என, மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இன்றையதினம் (09) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாட்டுக்கு தமிழ் கட்சிகளுக்கான அழைப்பினை வழங்கினோம் அல்லாமல் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி வழங்கவில்லை தானாக மாநாட்டுக்கு வந்தார். வந்தவரை வரவேற்கும் பண்பின் அடிப்படையில் அவரை அழைத்தோம்.
ஆனால் வந்த சுமந்திரன் எமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் இந்தியாவைப் போல் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் நமது கட்சியின் தலைவருக்கு கூறியதாக செய்திகள் வெளி வந்ததாக அறிந்தோம்.
அத்துடன் சமஷ்டியைப் பற்றியோ தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சம்பந்தன் மற்றும் சிறிதரனை விட நமது கட்சியின் தலைவர் அநுரவுக்கு நன்கு தெரியும்.
ஆகவே நாம் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். ஆனால் தனி நபர்களை அழைத்து அரசியல் செய்யும் நோக்கம் தமது கட்சிக்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.