மார்ச் 28 வியாழனன்று, அதாவது நேற்று மதியம் தொலைபேசிகளுக்கு ஒரேயடியாக வந்த எஸ்எம்எஸ் அலர்ட்களால், அரசியல் களம்

கலக்கியது. முஸ்லிம்களுக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதாவது, 2016-ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கூரகல விகாரை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம், தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிப்பதாக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர் குற்றச்சாட்டுக்கள் இரண்டிலும் குற்றவாளியாக தீர்ப்பளித்ததன் மூலம் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர், கடந்த 28-ம் திகதி பிற்பகல் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகியோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக, ராவணா சக்தி அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகண்டே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

ஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சமூக வலைத்தளங்கள் ஊடாக “இனவாதத்தை நிறுவியவர்கள் சுதந்திரமாக உள்ளனர் - ஞானசார சிறைச்சாலையில்” என்ற பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டு முதல் பத்து வருடங்கள் அரச பணத்தை சுரண்டி அரச அதிகாரத்தை பிரயோகித்த மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பம், அரச அதிகாரத்தை இழந்த பின்னர், 2019-ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக்க அமுல்படுத்தப்பட்ட இனவாத சதியின் கைபொம்மையாக, ஞானசார தேரரே மாறினார்.

“மெதகொட அபேதிஸ்ஸ தேரர், மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, உதய கம்மன்பில, அநுராதா யஹம்பத், விமல் வீரவங்ச, பெசில் ராஜபக்ஷ போன்ற சதிகாரர்களால் உருவாக்கப்பட்ட இந்த இனவெறிச் சதியின் இறுதியில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர், அவர்களுடைய பொய்ப் புறட்டுகளுக்கு ஏமாந்து, இனமொன்றையே காட்டிக்கொடுத்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரராவார்” என்று கூறியே, “இனவாதத்தை தோற்றுவித்தவர்கள் சுதந்திரமாக உள்ளனர்” என்று, பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

இனவாதச் சதியை நிறுவியவர்கள் சுதந்திரமாக இருந்தாலும், அவர்களின் பூனைக் கைகள் சிறைப்பட்டு வருகின்றன என்பதையே, இந்தப் பிரச்சாரம் வலியுறுத்துகிறது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டலஸ் அழகப்பெரும கூறியது போல், ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 193 நாட்களே உள்ளன. ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் ஒரு இனவாதப் போக்கு வெளிப்படுவது ஆபத்தானது. இனவாத, மதவாதப் போக்குகளால், இந்நாட்டு மக்கள் தேவைக்கு அதிகமாகவே நட்டப்பட்டுள்ளனர். எனவே, அந்தப் பாவ மலையைச் சுமக்கவேண்டிய அவசியமில்லை. அதனால், மக்கள் இது தொடர்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி