இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதை 40

சதவீதமான பெண்கள் கைவிட்டுள்ளதாக, சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சானிட்டரி நாப்கின்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதே இதற்கு முக்கிய காரணம் எனவும், அந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கொவிட் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்துப் பொருட்களுக்கும் செலுத்த வேண்டிய விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளது.

இது, இந்நாட்டுக் குடிமக்களின் அன்றாட வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் நுகர்வுக்கு எடுத்துக்கொள்ளும் பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

குடும்ப ஆளுகை குறித்து, சிவில் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் இதன் இன்னொரு முகமும் தெரியவந்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட 40 சதவீதமான பெண்கள், சானிட்டரி நாப்கின் பாவனையை நிறுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பெண்ணின் உயிரியல் சுழற்சியில் அது ஏற்படுத்தும் விளைவு கவனத்திற்குரிய அளவில் உள்ளது என்று அவ்வமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

இது விடயத்தில், பிபிசி தமிழ் செய்திச் சேவையில், ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த செய்தி அறிக்கையொன்றில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை பொருளாதார நெருக்கடியால் மாதவிடாயின்போது சானிட்டரி நாப்கின் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்கள்

இலங்கையில் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களின் விலை சடுதியாக அதிகரி்த்தமையின் காரணமாக, அவற்றினைப் பெற்றுக் கொள்வதில் பாடசாலை மாணவிகள் உட்பட, பெண்கள் பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, சானிட்டரி நாப்கின்களின் மூலப்பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை நீக்குமாறும், நாப்கின்களின் விலைகளைக் குறைக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 51.6 வீதமானோர் பெண்கள். இவர்களில் 10 வயது முதல் 50 வயது வரையிலானோர் மாதவிடாய் கால நாப்கின்களின் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என, அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்திருந்தார்.

புள்ளி விவரவியல் திணைக்களத்தின் தரவுகளின் படி 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நாட்டில் 66 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச இறக்குமதித் தீர்வை மற்றும் உள்நாட்டு வரிகள் காரணமாக சானிட்டரி நாப்கின்களுக்கான விலைகள் வெகுவாக அதிகரித்தன. அந்த வகையில் தற்போது 42 சதவீதமான வரிகள் - மாதவிடாய் நாப்கின்கள் மீது விதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மாதவிடாய் கால நாப்கின்களின் சடுதியான விலையேற்றம் காரணமாக பாடசாலை மாணவியர்களும் பெண் ஆசிரியர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை மாணவியர்களில கணிசமானோர் மாதவிடாய் காலத்தில் பாடசாலைகளுக்கு வருகை தருவதில்லை என்றும் அவ்வாறான நிலைமை பிள்ளைகளின் படிப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, பாடசாலைகளில் பெண் மாணவர்களுக்கு மாதவிடாய் நாப்கின்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மாதவிடாய் நாப்கின் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் ஐந்து பிரதான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு வரிச்சலுகையை வழங்குவதற்கும் - அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

அரசாங்கத்தின் மேற்படி தீர்மானத்துக்கு அமைய - உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்கள், பத்து எண்ணிக்கை அடங்கிய ஒரு பாக்கெட்டின் விலை 50 தொடக்கம் 60 ரூபாய் வரை குறைவடையும் என்றும், அதற்கமைய அதன் அதிகபட்ச சில்லறை விலை 260 தொடக்கம் 270 ரூபாயாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் முடிவுப்பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலைகளும் 18% அல்லது 19% குறைவடையும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மாதவிடாய் நாப்கின்களுக்கு பூஜ்ஜிய சதவீத வாட் வரி விதிக்கப்படும் என்றும் மாதவிடாய் நாப்கின்களை முடிவுப்பொருட்களாக இறக்குமதி செய்பவர்களுக்கும் பூஜ்ஜிய சதவீத வாட் வரியின் அனுகூலம் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாதவிடாய் நாப்கின்கள் தொடர்பான வரிகளை நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதும், அது தொடர்பில் அதிகாரபூர்வமான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை என, மாதவிடாய் நாப்கின்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வோர் கூறுகின்றனர்.

வரிக்குறைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால், மாதவிடாய் நாப்கின்களின் விலைகளைக் குறைப்பதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றனர்.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் 10 நாப்கின்களைக் கொண்ட ஒரு பாக்கெட், 145 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், வரிகள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் அதன் தற்போதைய விலை 330 ரூபாயாக உயர்வடைந்துள்ளது,

இந்த நிலையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நாடு முழுவதுமான தமது நாப்கின் விற்பனையில், இவ்வருடம் (மார்ச் முதல் ஆகஸ்ட் வரையில்) 10 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மாதவிடாய் நாப்கின்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனமொன்று கூறுகிறது.

இலங்கையில் மாதவிடாய் ஏற்படும் பெண்களில் 30 சதவீதமானவர்களே, மாதவிடாய் நாப்கின்களைப் பயன்படுத்துவதாகவும், மிகுதி 70 சதவீதமானோர் துணிகளையே பாவிக்கின்றனர் எனவும் மாதவிடாய் நாப்கின் உற்பத்தி நிறுவனமொன்றின், பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதேவேளை மாதவிடாய் நாப்கின் பயன்படுத்தும் 30 வீதமானோர் தொகையில், கடந்த 06 மாதங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால், 'ஆட்வொகேற்றா' (Advocata) எனும் கொள்கை வகுப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, இலங்கையில் மாதவிடாய் ஏற்படும் 50% பெண்கள் வறுமையில் உள்ளனர் என தெரியவந்துள்ளது. அதாவது மாதவிடாய் ஏற்படும் பெண்களில் 50 சதவீதமான குடும்பங்களில் மாதவிடாய் நாப்கின்களுக்காக பணம் எதுவும் செலவிடப்படுவதில்லை என அந்த ஆய்வு கூறுகின்றது.

இலங்கையில் மலையகப் பிரதேசத்திலேயே மாதவிடாய் நாப்கின்கள் ஆகக்குறைவாகப் பயன்படுத்தப்படுவதாகவும், 12 சதவீதமானவர்களே அங்கு நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர் எனவும் பிபிசி தமிழிடம் பேசிய மேற்படி அதிகாரி குறிப்பிட்டார்.

அதற்கடுத்து ஊவா மாகாணத்தில் குறைந்தளவில் நாப்கின்கள் பாவிக்கப்படுகின்றன என்றும், அங்கு 20 - 22 சதவீதமானவர்களே மாதவிடாய் நாப்கின் பாவிக்கின்றனர் எனவும் கூறினார்.

இது இவ்வாறிருக்க, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தினருக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியில், அதிக விலைக்கு மாதவிடாய் நாப்கின்களைப் பெற்றுக் கொள்வது பிரச்னையானதொரு விடயமாக மாறிப் போயுள்ள நிலையில், அதற்கு பதிலீடாக துணிகளைப் பயன்படுத்த முடியும் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் பறூஸா நக்பர்.

மாதவிடாய் நாப்கின்களை கட்டாயமாகப் பாவிக்க வேண்டும் என்கிற நிலை இல்லை என்றும், அதற்கு பதிலீடாக சுத்தமான பருத்தித் துணிகளைப் பாவிக்க முடியுமென்றும் பிபிசி தமிழிடம் டாக்டர் பறூஸா கூறினார்.

ஆனாலும் இதன்போது சில விடயங்களைப் பின்பற்ற வேண்டுமேன அவர் வலியுறுத்தினார்.

"மாதவிடாயின் போது பயன்படுத்திய துணிகளை - சவர்காரமிட்டு நன்றாகக் கழுவி, வெயிலில் காயவிட வேண்டும்," என கூறும் அவர்; "அதன் பின்னர்தான் அதனை மீண்டும் மாதவிடாய் ஏற்படும்போது பயன்படுத்த வேண்டும்," என்கிறார்.

இந்தத் துணிகளை வெயில் இல்லாத சூழலில் உலர்த்திப் பயன்படுத்தும் போது, அது சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் எனவும் அவர் எச்சரிக்கின்றார்.

துணியை விடவும் நாப்கின்கள் பாவனைக்கு இலகுவானது, சௌகரியமானது என்பதனாலேயே வசதி படைத்தவர்களால் நாப்கின்கள் விரும்பப்படுவதாகவம் அவர் சுட்டிக்காட்டினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி