மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை

மேம்படுத்துவதற்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என ஒவ்வொரு பகுதியிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி சில அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ள போதிலும், மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தேவையற்றவை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த வருடம் நீர் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், நீர்ச் சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் மீது தேவையற்ற சுமையை சுமத்தப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

“தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயற்பாடுகளைப் பொருத்தவரை, கடந்த 19 ஆம் திகதி 1300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது என்ற வகையிலேயே ஒரே நேரத்தில் இதனை ஆரம்பித்தோம். எஞ்சியிருக்கின்ற 8700 வீடுகளையும் இவ்வாறே ஒரே நேரத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏனென்றால் நாம் ஒரு முறைமையின் அடிப்படையில் செயற்பட விரும்புகின்றோம். இந்த 1300 வீட்டுத்திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பூர்த்தி செய்யப்படும்.

“இந்த வீட்டுத் திட்டப் பயனாளிகள் அரசியல் ரீதியாக தெரிவுசெய்யப்படுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.அதில் எந்த உண்மையும் கிடையாது. முக்கியமாக இந்த வீட்டுத்திட்டப் பயனாளிகள் குறித்த ஒரு அளவுகோளில் அடிப்படையிலேயே தெரிவுசெய்யப்படுவர். உதாரணமாக இரண்டு, மூன்று குடும்பங்கள் ஒரு லயத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதுவரை எந்தவொரு அரசாங்க வீட்டுத் திட்டத்தின் ஊடாகவும் பயன் பெறாதவர்களும் தற்காலிக குடியிருப்புகளில் இருப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

“அத்துடன் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் மலையக மக்களுக்கு 10 பேச்சர்ஸ் காணி வழங்கப்படுகிறது. அவ்வாறு யாருக்காவது 7 பேர்ச்சஸ் காணி மட்டும் வழங்கப்படுமாயின் அதுகுறித்து முறையிட்டால் அவர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்க நடவடிக்கை எடுப்போம். சுயதொழில் வாய்ப்பை ஊக்குவிப்பதற்காகவே பாரத் – லங்கா வீட்டுத் திட்டத்தின் மூலம் 10 பேர்ச்சஸ் காணி வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. “ பிரஜா சக்தி” வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

“இந்த வருடத்தின் நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக “கந்துரட்ட தசக” என்ற வேலைத் திட்டத்தின் மூலம் 89 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தலா 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே நிர்மாணிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள வீடுகளுக்கு இதில் ஒரு தொகை நிதி வழங்கப்படும். மேலும் மலையக மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

“காணி வழங்கப்படும் போது அந்தக் காணி உறுதிப்பத்திரத்தை பெருந்தோட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தது. அதனை நாம் மறுத்திருக்கிறோம். காரணம், நிபந்தனையற்ற முறையில் இந்தக் காணி உறுதிப் பத்திரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். பெருந்தோட்டக் கம்பனிகளின் கோரிக்கையை பிரதமர் அலுவலகமும் மறுத்துள்ளது. இதனைத்தவிர, தற்போது பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான அளவுகோளைத் தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த காணி உரிமை வழங்குவது தொடர்பான திட்டத்தினை எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் அமுல்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக ஜனாதிபதி 4,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளார்.

“அத்துடன், தோட்டத்தில் வேலை செய்தால் மட்டுமே வீடு வழங்கப்படும் என்ற நிபந்தனை இதுவரை இருந்தது. ஆனால் , இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையும் சேர்த்து, இந்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் தோட்டத்தில் பிறந்தால் வீடு என்ற வேலைத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம்.

“இதற்கமைய தோட்டத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து, தோட்டத்தில் இருந்து ஆசிரியர் தொழில் செய்யும் ஒருவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கும். அதேபோல், கலைஞர்களுக்கும் வீடு கிடைக்கும். அத்துடன், 2015ஆம் ஆண்டு இந்திய வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி, அளவுகோளின் அடிப்படையில் வீடுகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம். ஆனால் இந்தப் பணிகள் அரசியல்மயப்படுத்தப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இந்த ஆண்டு நீர்க் கட்டணத்தை அதிகரிக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்த நீர்க் கட்டண சூத்திரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. நீர் சூத்திரதிலுள்ள விடயங்கள் குறித்து மேலும் ஆராய்ந்து வருகிறோம். நீர் சூத்திரம் மூலம் மக்கள் மீது மேலும் தேவையற்ற சுமையை திணிக்கவோ அதனை அமுல்படுத்தவோ தற்போது நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 2024 என்பது கொள்கைகளை உருவாக்கும் ஆண்டாகும். 2025 என்பது கொள்கை அமுலாக்கும் ஆண்டாகும். இருப்பினும், நீர்க் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவது அவசியமாகும்.

“மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரு சில அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கூட கைச்சாத்திட்டுள்ளன. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தேவையில்லை.

“சில அரசியல் தலைவர்களின் கூற்றுப்படி, தோட்டங்களில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஒரே பிரச்சினை 1500 ரூபா நாளாந்த சம்பளம் பெற்றுக்கொள்வதாகும். எனது மக்களை அந்தளவு தாழ்த்த நான் விரும்பவில்லை. அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சி அல்லது எந்தக் குழுவின் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் சிறுபான்மைப் பிரிவினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசியல் பிளவுகள் இருக்கக் கூடாது என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

“அதுவே எனது நிலைப்பாடுமாகும். அந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் இணைந்து செயற்பட முன்வருமாறு பல தடவைகள் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதிலும் துரதிஷ்டவசமாக பலர் அரசியல் நோக்கில் செயற்பட்டு வருகின்றன” என்று, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி