நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு, அவை வழமைக்குத் திரும்பும் வரை நேர நீடிப்பை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என கல்வி அமைச்சு நேற்று இரவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் இன்று (2) வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிவிப்பின்படி, 2026 ஆம் ஆண்டில் 5 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான பாடசாலை நேரம் முற்பகல் 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை மாற்றமின்றி தொடரும்.
மேலும், 6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை ஒரு நாளைக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆக இருக்கும் என்பதுடன், ஒரு பாடவேளைக்காக முன்பைப் போலவே 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
கல்விச் சீர்திருத்தச் செயல்முறை தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்கு இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதன்கீழ் தரம் 6 க்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 ஆம் திகதி முறையாக ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசு, அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் தரத்திற்கான மாணவர் அறிமுகச் செயல்முறை ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி முறையாக ஆரம்பமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரம் 1க்கான செயல்முறைப் புத்தகங்கள் மற்றும் தரம் 6 க்கான கற்றல் கையேடுகள் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய தரங்களுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே விநியோகித்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை, 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதிகள் எதிர்வரும் ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


