அதிகரித்துள்ளதுடன், திருத்தப்பட்ட கட்டணங்கள் 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
2025 டிசம்பர் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கெசினோ நுழைவு வரி ஒரு நபருக்கு 50 அமெரிக்க டொலரிலிருந்து 100 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கெசினோ அல்லது அது சார்ந்த விளையாட்டு நிறுவனங்களுக்குள் நுழையும் ஒவ்வொருவரிடமிருந்தும் இந்த வரி வசூலிக்கப்படும். இதனை அமெரிக்க டொலர்களிலோ அல்லது மாற்றத்தக்க வேறு வெளிநாட்டு நாணயங்களிலோ செலுத்த வேண்டும். இலங்கை பிரஜைகளாக இருந்தால் இலங்கை ரூபாயில் செலுத்த முடியும்.
இதற்கு மேலதிகமாக, பந்தயம் மற்றும் விளையாட்டு வணிகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மொத்த சேகரிப்பு வரி 15 வீதத்திலிருந்து 18 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட இந்த வரியானது, மாதத்திற்கு 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த சேகரிப்பைக் கொண்ட வணிகங்களுக்குப் பொருந்தும் என்பதுடன், இது 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
2025ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்தச்) சட்டத்தின் கீழ், 1988ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நடைமுறைக்கு வரும் திகதி முதல், கெசினோ நடத்துனர்கள் மற்றும் பந்தயம் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடும் வணிகங்கள் புதிய வரி விதிப்புக்கு இணங்க செயல்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், திணைக்களத்தின் வரி நிர்வாகம் மற்றும் பந்தயம் மற்றும் சூதாட்ட வரிப் பிரிவின் ஊடாக மேலதிக விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


