75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் திருப்பகரமான ஒரு முடிவு எட்டப்படும்

என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய பொழுது அவருடைய நிகழ்ச்சி நிரல் அவ்வாறுதான் காணப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பேச்சுவார்த்தைகள் முன்னேறவில்லை. அதைவிட முக்கியமாக சுதந்திர தினத்தை ஒரு கரி நாள் என்று பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்கள்.

கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திர தினம் எனப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு கெட்ட நாளாகவே காணப்படுகிறது. தமிழ் மக்கள் தங்களுடைய சுதந்திரத்தை இழந்த நாளாக அதைக் கருதுகிறார்கள்.

1956 ஆம் ஆண்டு இதே நாளில் திருமலையில் தியாகி நடராசன் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழரசு கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று கட்டப்பட்டிருந்த சிங்கக் கொடியை அகற்றி கறுப்புக் கொடியை பறக்க விட முயற்சித்த பொழுது சுட்டுக் கொல்லப்பட்டார். நவீன தமிழ் அரசியலில் தொடக்க கால தியாகிகளில் அவரும் ஒருவர்.தமிழ் மிதவாதிகளால் தூண்டப்பட்ட இளையோர் தமது உயிரைத் துச்சம் என மதித்து துணிகரமான செயல்களில் ஈடுபட முடியும் என்பதனை உணர்த்திய முதல் சந்தர்ப்பம் அது.

திருமலை நடராஜனிலிருந்து தொடங்கி சுதந்திரத்துக்காக உயிரைக் கொடுத்த, உறுப்புகளைக் கொடுத்த, கல்வியை, சுகபோகங்களை, சொத்துக்களை இழந்த மிக நீண்ட தியாகிகள் பட்டியல் ஒன்றை இப்பொழுது தமிழ் மக்கள் வைத்திருக்கிறார்கள். ஆனாலும், 66ஆண்டுகளின் பின்னரும் தமிழ் மக்களுக்கு சுதந்திர தினம் ஒரு கரிநாளாகத்தான் உள்ளது. தமிழ் மக்கள் தங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றே இப்பொழுதும் நம்புகிறார்கள்.தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்குந்தான் சுதந்திரம் இல்லை முஸ்லிம் மக்களுக்குந்தான் சுதந்திரம் இல்லை.

கடந்த ஆண்டு நடந்த தன்னெழுச்சி போராட்டங்கள் அதைத்தான் நாட்டு மக்களுக்கு உணர்த்துகின்றன. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த அதிகம் படைப்புத்திறன் மிக்க ஒரு அறவழிப் போராட்டம் அது.”அரகலய” போராட்டம் சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் இல்லை என்பதை உணர்த்தியது. அதற்கு முன் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பும் அதன் பின்னரான விளைவுகளும் முஸ்லிம் மக்களுக்கும் சுதந்திரம் இல்லை என்பதை உணர்த்தின. ஆகமொத்தம் ராஜபக்சக்கள் சிங்கள மக்களுக்கு பெற்றுக் கொடுத்ததாக பிரகடனப்படுத்திய சுதந்திரம் இப்பொழுது யாரிடம் இருக்கிறது?

ஏன் அதிகம் போவான்? ராஜபக்சேக்களுக்கே சுதந்திரம் இருக்கவில்லை. அவர்கள் படைத்தளங்களில் பதுங்க வேண்டி வந்தது. நாட்டுக்கு நாடு ஓட வேண்டி வந்தது. அவர்கள் வென்றெடுத்த நாட்டில் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றானது. அதுதான் அவர்கள் பெற்றுக் கொடுத்த சுதந்திரம்.

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் தருவியாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார். எனினும் ராஜபக்சங்களுக்கு இப்பொழுதும் சுதந்திரம் இல்லைத்தான். கடந்த மாதம் கனடா விதித்த தடைகளின்படியும் அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், ராஜபக்சக்கள் அமெரிக்க கண்டத்தில் வாழ்வது, நடமாடுவது போன்றன எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகலாம். அதாவது அவர்கள் பெற்றுக் கொடுத்ததாகக் கூறிய சுதந்திரம் அவர்களுடைய நாட்டுக்குள்ளையே சுருங்கி வருகிறது.

அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுடைய மக்களுக்கும் அந்த சுதந்திரம் சாப்பிடக் கூடியதாக இல்லை;உழைக்கக் கூடியதாக இல்லை.அந்த சுதந்திரத்தை சாப்பிட முடியாத காரணத்தால் அந்த சுதந்திரத்துள் உழைக்க முடியாத காரணத்தால் சிங்கள மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் கடவுச் சீட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த தகவல் பரவலாக ஊடகங்களில் பகிரப்பட்டது. 6000க்கும் குறையாத மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக அவர் கூறுகிறார். ராஜபக்சக்கள் வென்று கொடுத்த நாட்டை விட்டு ஏன் மூளைசாலிகள் வெளியேற வேண்டும்?

அதுமட்டுமல்ல தன்னெழுச்சி போராட்டங்களுக்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தியும், தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவுகளை பயன்படுத்தியும், வெளிச்சக்திகள் இச்சிறிய தீவின் மீதான தமது பிடியை இறுக்கி வருகின்றன. அல்லது அவ்வாறு தமது பிடியை இறக்குவதற்கான ஒரு பலப் பரீட்சையில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 13 ஆண்டுகளில் இலங்கை தீவில் இந்தியா அதிகமாக பெற்றுக் கொண்ட ஆண்டு கடந்த ஆண்டு எனலாம். எனினும் கடந்த 13 ஆண்டுகளுக்குள் ஏற்கனவே இலங்கை தீவில் காலூன்றி நிற்கும் சீனாவை அகற்ற இந்தியாவால் முடியாது. அம்பாந்தோட்டையில் இருந்து சீனாவை அகற்றுவதென்றால் அதற்கு குறைந்தது 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நாட்டின் அடையாளமாக முன்னர் காணப்பட்டது அதன் பௌத்த மரபுரிமை சின்னங்கள்தான். ஆனால் இப்பொழுது இந்த நாட்டின் அடையாளமாக கூறப்படுவது, சீனா கட்டிக் கொடுத்த தாமரை மொட்டு கோபுரம்தான். சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இச்சிறிய தீவு மாறிய பின்,நாட்டின் நிலப் பரப்பு அதிகரித்துள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ள சீனப்பட்டினமானது, இலங்கைத் தீவின் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குவது.

அச்சிறிய பொருளாதார பட்டினத்துக்கு இலங்கை அரசாங்கம் அதிகரித்த அதிகாரங்களை வழங்கியது. 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டதை விடவும் சிறப்பு அதிகாரங்கள் சீனப் பட்டினத்துக்கு உண்டு என்று விமர்சனங்கள் எழுந்தன. சீனப் பட்டினம் ,அம்பாந்தோட்டை துறைமுகம், தாமரை மொட்டுக் கோபுரம், வடக்கில் கடலட்டைப் பண்ணைகள்…என்று இச்சிறு தீவு இப்பொழுதும் சீனாவின் விரிவாக்கத்துக்குள்தான் காணப்படுகின்றது.

அதே சமயம் இந்தியாவும் தன் பங்கிற்கு இச்சிறிய தீவினுள் எங்கெல்லாம் காலூன்ற முடியுமோ அங்கெல்லாம் காலூன்ற முனைகிறது. கடந்த ஆண்டு இந்தியா ஆறு உடன்படிக்கைகளை எழுதிப் பெற்றுக் கொண்டது.

எனவே ஆயுத மோதல்களுக்கு பின்னரான கடந்த 13 ஆண்டுகளை அதாவது ராஜபக்சக்கள் சிங்கள மக்களுக்கு நாட்டை வென்று கொடுத்த பின்னரான கடந்து பதின் மூன்று ஆண்டுகளைத் தொகுத்துப் பார்த்தால், நமக்கு கிடைக்கும் சித்திரம் என்ன? அவர்கள் வென்றெடுத்த நாடு அதன் மக்களுக்கு சொந்தமில்லை. அவர்கள் வென்றெடுத்த நாட்டில் அவர்களுடைய மக்களே இருக்க விரும்பவில்லை. அவர்கள் வென்றெடுத்த நாட்டில் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அவர்கள் வென்றெடுத்த நாடு உலகின் மிக கேவலமான கடனாளியாக மாறி விட்டது. இப்பொழுது கூறுங்கள் அவர்கள் வென்றெடுத்தது எதனை? அதற்கு பெயர் சுதந்திரமா?

புவிசார் அரசியல் விளக்கங்களின்படியும், பூகோள அரசியல் வியூகங்களின்படியும் ஒரு சிறிய நாடு முழு அளவுக்கு சுதந்திரமானதாக இருக்க முடியாது. ஆனால் அச்சிறிய நாடு வெளிச்சக்திகள் தலையிட முடியாதபடி உருகிப் பிணைந்த ஒரு நாடாக இருந்தால் அது ஒப்பிட்ட அளவில் ஆகக்கூடிய பட்சம் சுதந்திரமாக இருக்கலாம். சிறிய நாடுகளைப் பொறுத்தவரை சுதந்திரத்தின் அளவு என்பது ஐக்கியத்தின் அளவுதான்;நல்லிணக்கத்தின் அளவுதான். அந்த நாட்டில் வாழும் எல்லா மக்கள் கூட்டங்களையும் அந்த நாட்டின் சக நிர்மாணிகளாக ஏற்றுக்கொண்டு பல்லினத்தன்மை மிக்க ஒரு நாடாகக் கட்டியெழுப்பினால் அது ஆகக்கூடிய பட்சம் சுதந்திரமாக இருக்கலாம். இல்லையென்றால் தனக்குள் மோதிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை வெளிச் சக்திகள் வேட்டையாடும். அதுவும் இலங்கை போன்று மூன்று பேரரசுகளின் இழுவிசைகளுக்குள், கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு ஜல சந்தியில், காணப்படும் மிகச்சிறிய நாடானது, தனக்குள் அடிபடுமாக இருந்தால் அது பேரரசுகள் பங்கிடும் ஒரு அப்பமாக மாறிவிடும். அதுதான் இப்பொழுது நடக்கிறது.

இலங்கைத் தீவு இப்பொழுது ஒரு சுதந்திரமான நாடு அல்ல. இறமையுள்ள நாடும் அல்ல. தமிழ் மக்கள் சுதந்திரமாக இல்லாதவரை சிங்கள மக்களும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதைத்தான் கடந்த 13 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன. போரில் வெற்றி பெற்ற பின்னரும் ஏன் இந்த நாடு சுதந்திரமாக இருக்க முடியவில்லை? ஏன் இந்த நாடு செழிப்பாக நிமிர முடியவில்லை? தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்த பின்னரும் தமிழ் அரசியலை முன்வைத்து ஏன் ஜெனிவாவில் ஒவ்வொரு ஆண்டும் பதில் கூற வேண்டியிருக்கிறது? வடக்கில் கடலட்டை எப்படி ஒரு ராஜதந்திரக் கருவியாக மாறியது? ஆயுத மோதல்களில் வெற்றி பெற்ற பின்னரும் இந்த நாடு ஐ.எம்.எப் போன்ற அனைத்துலக நிறுவனங்களின் சொற் கேட்டு கீழ்ப்படியும் ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது?

இலங்கை அதன் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒரு காலகட்டம் எனப்படுவது ஐ.எம்.எப் போன்ற வெளிதரப்புகளிடம் கடன் கேட்டுக் கையேந்தும் ஒரு காலமாகவே காணப்படுகிறது. இவ்வாறு வெளிநாடுகளிடமும் உலகப் பொது நிறுவனங்களிடமும் கையேந்தும் ஒரு நாடு தன்னை சுதந்திரமான நாடாக கூறிக்கொள்ள முடியுமா?அல்லது அது கையேந்துவதற்கான ஒரு சுதந்திரமா?

நன்றி - நிலாந்தன்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி