சிங்கள ராஜதந்திரத்தில் "முடிந்தால் குடுமியைப்பிடி முடியாவிட்டால் காலைப்பிடி" என்று ஒரு பழமொழி உண்டு.

இதனை அனைத்து சிங்களத் தலைவர்களும் தமக்கு நெருக்கடி வருகின்ற போதெல்லாம் பயன்படுத்தி நிலைமைகளை சமாளித்துக் கொள்ளும் ராஜதந்திர உத்தியை பிரியோகிக்க தவறுவதில்லை.

இலங்கை தீவில் இன்றுள்ள பொருளாதார நெருக்கடியும், இந்தோ-பசுபிக் பிராந்திய வலுச்ச சமநிலை இலங்கைத்தீவில் மையம் கொண்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க சிங்களத் தலைவர்களை அனைத்து எதிர் சக்திகளிடமும் பணிந்து அவர்களின் காலைப்பிடிக்கும் தந்திரத்தை தற்போது கையாளுகின்றனர்.

காலில் விழுந்து காலை தடவுவார்கள்

அரசியலில் எப்போது எதிரி பலம் இழந்திருக்கிறானோ அப்போதுதான் அவன் தன் எதிர்த்தரப்பினரை நோக்கி பணிந்து வருவான். சமாசாரம் பேசுவான். அணைக்க முற்படுவான். காலைப் பிடிப்பான். சிங்களத் தலைவர்கள் பலவீனமானபோது காலில் விழுந்து காலை தடவுவார்கள். பலமாக இருக்கின்ற போது தோளில் ஏறி குரல்வளையைக் கடிப்பர். இது எப்போதும் சிங்கள தலைவர்களின் இயல்பு.

இப்போது தமிழ் தரப்பின் காலை பிடிப்பது காலை வாரிவிடுவதற்கே என்பதை தமிழ் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எதிரி பலவீனமாக இருக்கின்ற போதுதான் நாம் பலமாக போராட வேண்டும்.

அவ்வாறு நாம் பலமாக போடுவதற்கு பதிலாக எதிரியின் நிகழ்ச்சி நிரலுக்குள் உட்பட்டு எதிரியை பலப்படுத்துகின்ற மிக இழிவான சுயநலன்மிக்க, அரசியல் அறிவீனமான செயல்களிலேயே தமிழ் தலைமைகள் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதுதான் மிகவும் துயரகரமானது.

சடுதியான வீழ்ச்சி

ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்ட எதிர்பாராத சடுதியான வீழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதனையே தனது முதலீடாக்கிய ரணில் விக்ரமசிங்க, அதுவும் தானும் தனது கட்சியும் அடியோடு தோல்வி அடைந்திருந்த நிலையில், சிங்கள தேசத்துக்கு தலைவனாகியமை என்பது அரசியல் சித்து விளையாட்டின் உச்சமும் ராஜதந்திரத்தின் மகுடமும் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு மிகப் பலவீனமான ஒரு தலைவன் தேர்தலில் வெற்றி பெறாமல் படு தோல்வி அடைந்தவர் ஜனாதிபதியாகிய விசித்திரம் இலங்கை தீவில் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது.

ஒரு பலவீனமான தலைவன் தன்னை பலப்படுத்தவும், ஸ்திரபடுத்தவும், சிங்கள தேசத்தில் சிங்கள மக்களை தன் பக்கம் திருப்பவும் பல்வேறு சக்திகளையும் அரவணைக்கும் தந்திரத்தையே கையாள்வார். எந்த சக்திகளையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எதிர்க்க ஒருபோதும் முனைய மாட்டார்.

அந்த அடிப்படையில்தான் இலங்கையின் சமாதான பேச்சுக்களக்கான தூதராக இருந்த எரிக்சொல்கேம் இப்போது ரணில் விக்ரமசிங்காவின் அரவணைப்பில் உள்ளார். இப்போது இலங்கையின் அரசியலில் முக்கிய பாத்திரத்தை வகிப்பவர் மேற்குலகத்தினால் அனுப்பப்பட்டிருக்கும் எரிக் சொல்கைம்தான்.

இன்று இலங்கை உண்மையான ஜனாதிபதியாக தொழிற்பவர் (De facto President) எரிசெல்கேம்தான். ரணில் விக்ரமசிங்க முதலில் ஒரு தலைவராக ஆகவே தொழிற்படுகிறார்.

இத்தகைய தலைவர் தனது பலவீனத்தை நிவர்த்தி செய்து பலப்படுத்துவதற்கு அனைத்து சக்திகளையும் அரவணைத்து கீழ்ப்படிந்து தொழிற்படுவார்.

இப்போது உள்ள நிலைமை தற்போதைய தலைமைத்துவத்தை பாதுகாப்பதும், எதிர்கால இன்னுமொரு தேர்தல் காலகட்டத்தில் தன்னை தலைவராக ஸ்தாபிதம் அடையச் செய்வதும்தான் ரணில் விக்ரமசிங்கவினுடைய அரசியல் இலக்கு.

அரசியல் அபிலாசைகள்

இந்த அரசியல் அபிலாசைகளின் ஒரு பகுதியாக திருமதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் கலாநிதி பட்டம் ஒன்றை பெற்றிருக்கிறார் என்பதிலிருந்தும், அந்திமக்காலத்திலும் ஒரு ஜனாதிபதியின் மனைவி கலாநிதி பட்டம் பெற்றது என்பதும், இலங்கையின் ஜனாதிபதிகளின் மனைவிகளில் இவர் ஒருவரே கலாநிதி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வயதிலும் கலாநிதி பட்ட ஆசை இருக்கிறது என்றால் அரசியலில் எத்தகைய ஆசைகள் அவர் குடும்பத்துக்குள் இருக்கும் என்பதையும், அவர்கள் எத்தகைய புத்தூக்கம் பெற்றுள்ளார்கள் என்பதையும் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

எனவே இப்போது ரணில் விக்ரமசிங்க அரசியலில் இளமை துடிப்புடன் செயல்படுகிறார். அவர் தனது இலக்கை அடைவதற்கு அனைத்து சர்வதேச சக்திகளையும் அரவணைப்பார்.

அனைத்து உள்ளக சக்திகளையும் அரவணைப்பர். அவர் எதைச் செய்யப் போகின்றார் என்று யாரும் அனுமானிக்க முடியாத அளவுக்கு எதிரும் புதிருமான அரசியல் செயல்கள் நிகழ்த்தப்படும். போக்குகள் காட்டப்படும். ஆனால் அது ரணில் விக்ரமசிங்காவின் ராஜேந்திர நகர்வின் ஒரு பகுதியாகவே அமைந்திருக்கும்.

இதோ ரணில் விழுந்து விடுவார் என பலரும் ஊளையிடக் கூடும். ஆனால் அவர் மீண்டும் யானை மீது அமர்ந்து சவாரி செய்து கொண்டிருப்பார் என்பது மட்டும் நிதர்சனமாக இருக்கும்.

ரணில் விக்ரமசிங்க தனது உள்ளக அரசியல் எதிரிகளின் பலவீனத்தை எவ்வாறு மூலதனம் ஆக்கி தன்னைப் பலப்படுத்தி தலைவர் ஆகினாரோ அவ்வாறே சிங்களத்தின் பொது எதிரியான தமிழ் தரப்பையும், தமிழ் தரப்பின் அரசியல் ராஜதந்திர அறிவீனம் என்கின்ற பலவீனத்தையும் தனக்கு முதலிடாக்கி தற்போது அரசியல் சதுரங்கத்தை ஆட முற்படுகிறார்.

இதன் ஒரு பகுதிதான் தமிழ் தலைமைகளை அரசியல் தீர்வுக்கு அழைப்பதும், அரசியல் தீர்வை முன்வைக்கப் போவதாகவும் பிரகடனப்படுத்தி இலங்கை தீவில் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியை இனப் பிரச்சினையின் பால் மடைமாற்றி சிங்கள மக்களைத் தன்பக்கம் திருப்பி அரணமைத்துக் கொள்ள முற்படுகிறார்.

சமநேரத்தில் சர்வதேச அரசியலிலும், பிராந்தியத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்தியாவை எவ்வாறு கையாள வேண்டும் என்பதிலும் மிகச் சாதுரியமாக செயல்படுகிறார்.

ரணில் விக்ரமசிங்கவை பொறுத்தவரையில் அவர் முற்றுமுழுதாக மேற்குலகத்திடம் சரணடைந்திருக்கிறார். அதேநேரம் இந்தியாவின காலையும் பிடித்து இருக்கிறார். மறுவளம் சீனாவை இலங்கையில் கால்பதிக்க வைத்திருக்கிறார்.

இவ்வாறு எதிரிகள் அனைவரையும் நண்பர்களுடன் இணைத்து தனக்கான அரணாக மாற்றுவதில் முன்னோறிச் செல்கிறார். இந்தியாவுக்கு எதிரான சக்தியாக சீனாவை கையாள்வதிலும் நிலைமைகளுக்கேற்ப ஏற்ற இறக்கங்களை செய்வதிலும் ஈடுபட்டிருக்கிறார்.

ரணிலைப் பொறுத்தளவில் உண்மையில் மேலைத்தேச சிந்தனையிலும், வாழ்க்கை முறையிலும், மனநிலையிலும் வாழ்பவர். மேலை தேச சார்புக் கொள்கையிலும் ஊறிப்போன மனிதர்.

அத்தகைவர் சிங்கள தேசத்தின் கடந்த 2500 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இந்திய எதிர்ப்பு வெளியுறவுக் கொள்கையை கொண்டுள்ள இலங்கை ஆசியாவில் எழுந்து வரும் சீனா என்கின்ற பெரும் வல்லரசை அணைக்க வேண்டும் என்ற ராஜதந்திர உத்தியை கையாள்கிறார்.

மேற்கத்திய அனுசரணை

அதேநேரத்தில் மேற்கத்திய அனுசரணையையும் ஆதரவையும் பெறுவதற்கு எரிக்செல்கைம்மை இலங்கைக்குள் அழைத்து அரவணைத்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் மேற்குலகை சாந்தப்படுத்துகிறார். இந்தியாவை ஒரு முரண் நிலைக்குப் போகாமல், மேற்குலகுடன் ஒன்றிவிட்ட இந்தியாவையும் இலாவகமாக கையாள்கிறார்.

அவ்வாறு அவர் மேற்குலகத்திடம் சரணடைந்து இருப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பப்போவதில்லை. அதே நேரத்தில் சீனாவுடன் கைகோர்ப்பதையும் ஐக்கியமாவதையும் இந்தியா சகித்துக்கொள்ளப் போவதுமில்லை.

இத்தகைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களின் மனநிலையும் அவர்களின் எல்லைக்கோடுகளையும் ரணில் விக்ரமசிங்க நன்கு புரிந்து கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் தான் ஈழத் தமிழர் பிரச்சினையை கையில் எடுத்து அதனைப் பயன்படுத்தி அனைத்து எதிரிகளையும் தனக்கு அரணமைத்துக் கொள்ளும் விதத்தில் தமிழர் பிரச்சினையை கையாள்கிறார்.

இந்த கையாளுகை என்பது தமிழர்களை மென்மேலும் நசிந்துபோகச் செய்யவும், இந்தியாவை இலங்கை தீவின் இனப் பிரச்சினைக்குள் இருந்து அகற்றவும், மேற்குலக ஆதரவு என்ற மாயைக் காட்டி சீனாவை இலங்கையில் வலுப்படுத்தவும், அதனைப் பயன்படுத்தி தனது அரசியலை பலப்படுத்தி சிம்மாசனத்தில் தொடர்ந்து உட்கார்ந்து இருக்கவும் முற்படுகிறார்.

இப்போது தமிழர் பிரச்சினையை கையில் எடுத்து தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்போவதாக அறிவித்து சிங்கள மக்களை உசுப்பேத்தி சிங்கள தேசியவாதத்தை துாண்டி, திரட்டி தன்னை பலப்படுத்த முற்படுகிறார். இங்கே தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்பது உண்மையில் நடைமுறை அர்த்தத்தில் நிகழ்த்தப்படப் போவதில்லை.

தமிழர் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பதும், அதனை கையாள்வதன் மூலம் எதிரியின் கையைக் கொண்டே எதிரியின் கண்ணை குத்துகின்ற அதாவது தமிழ் தரப்பைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து காலத்தை இழுத்தடித்து தமிழ் தரப்பிற்குள் முரண்பாடுகளை அதிகளவில் தோற்றுவித்து தமிழ் தலைமைகளின் கைகளைக் கொண்டு தமிழ் மக்களின் கண்ணை குத்துகின்ற ராஜதந்திர நடவடிக்கை தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

தமிழ் தரப்பின் பலவீனமான இடைவெளிகளுக்குள்ளால் விவேகமான குதிரை பாய்ச்சலை செய்யும் பந்தய வீரனாகவும், நெளிவு சுழிவான பாதைகளை குறுக்கு மறுக்குமாக ஓடி வெற்றி கம்பத்தை தொடும் கிழச்சிங்கமாக ரணில் தொழில்ப்படுகிறார்.

ஆனால் தமிழ் தலைவார்களோ சிங்கள தேசத்தில் ஏற்பட்டிருக்கின்ற இடைவெளிகளுக்குள் நடந்துபோக கூடத் தெரியாதவர்களாக, இடைவெளி இருக்கின்றது என்பதைக்கூட பார்க்கத் தெரியாத அரசியல் குருடர்களாக வலம் வருகின்றனர்.

கண்ணுக்கு தெரிந்த எதிரி

தமிழ் தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு கண்ணுக்குத் தெரிந்த எதிரி வேண்டும். கண்ணுக்குத் தெரியாத எதிரியை இனம்காண அவர்களுக்கு தெரியவில்லை. அவ்வாறு தெரிந்துகொள்வதற்கான நுண்மான் நுழைபுலனும் அற்றவர்களாக தோற்றமளிக்கிறார்கள்.

தமிழ் தலைவர்களுக்கு உண்மையான எதிரியோ, இலக்கோ தெரிவதில்லை. அவ்வாறு தெரியாதபோது அவர்கள் தங்களுக்குள்ளே கற்பனையில் ஒரு எதிரியை சிருஷ்டித்து விடுகின்றனர்.

அந்த எதிரிக்கு விஸ்வரூபம் கொடுத்து அத்தகைய ஒரு கற்பனையான எதிரியை காட்டி அதற்கு வாள் வீசுவதும், மண்பொம்மைக்கும், கற்பனை பொம்மைக்கும் முஸ்தியால் ஓங்கிக்குத்தி வீரசாகச அரசியல் நடத்தும் கலையையே தமிழ் தலைவர்கள் கொண்டுள்ளார்கள்.

இதனால்தான் இவர்கள் எதிரிக்கு சேவகம் செய்பவர்களாக ஓடுகாலிகளாக இறுதியில் மாறிவிடுகின்றனர். எதனையும் எதிர்த்து அரசியல் நடத்திட முடியாது.

உலகளாவிய அரசியலில் எதிர்ப்பு அரசியல் ஒருபோதும் வெல்லப் போவதும் கிடையாது. தற்போது கண்மூடித் தனமாக தமிழ் தலைவர்கள் நடந்துகொள்ளக் கூடாது. எத்தகைய நெருக்கடியையும் எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர நெருக்கடிகளை எதிர்ப்பதனால் மட்டும் வெற்றி கிட்டப்போவதில்லை.

இன்று எழுந்திருக்கின்ற அரசியல் சூழமைவை தமிழ் தலைமைகள் கையாளப்போகின்றனவா? அல்லது வெறும் எதிர்ப்பரசியலை நடத்தி தாமும் விழுந்து தமிழ் மக்களையும் வீழ்த்தப் போகிறார்களா? இப்போது இச்சூழலை கையாள்வதற்கான தகுதியும், தந்ரோபாயமும் தமிழ் தலைவர்களிடம் உண்டா? சிங்கள பௌத்த பேரினவாத அரசு இன்று மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது.

இவ்வாறு சிங்கள தேசம் பலவீனமான காலகட்டத்தில் இருக்கும்போது எமது பொது எதிரிக்கு மேலும் மேலும் நெருக்கடியை கொடுத்து பலவினப்படுத்தி பணிய வைக்க வேண்டும்.

அதனூடாக தமிழ் தரப்பு தமக்குள் ஐக்கியப்பட்டு தமிழ் தேசியப் பேரெழுச்சி உருவாக்கி பலப்படுத்தி ஸ்திரப்படுத்த வேண்டும். ஆனால் துரதிஷ்டம் இவ்வாறு ராஜதந்திர ரீதியில் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு எதிரியை வெற்றி கொள்வதற்கான எந்த திட்டங்களும் இன்று வரைக்கும் எந்த தமிழ் தலைமைகளிடம் இல்லை என்பதுதான் மிக பரிதாபரமானது என வரலாறு பதிவு செய்கிறது.  

Courtesy: தி.திபாகரன், M.A.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி