1200 x 80 DMirror

 
 

பஞ்சாப் பாட்டியாலா மாவட்டத்தில் அறுவடைக்கு பிறகு எரிக்கப்படும் காய்ந்த பயிர்களை பார்வையிடும் விவசாயி அவ்தார் சிங்வட இந்தியாவில் நடக்கும் பயிர்த்தாள் (பயிர் கழிவுகள்) எரிப்பு என்பது பல வருடங்களாகவே காற்று மாசுக்கான ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனாலும் அதை நிறுத்தும் முயற்சி, வருடந்தோறும் தோல்வி அடைந்து விடுகிறது இது ஏன்? 
பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தில், தனது நெல் வயலில் இருந்து வெளியேறுகிற புகையால் சூழப்பட்டிருக்கிறார் அவதார் சிங். 

அடுத்த பயிருக்கு முன் நிலத்தை சுத்திகரிப்பதற்காக வயலில் எஞ்சியிருக்கும் வைக்கோலை (இதைப் பயிர்த்தாள் என்று அழைக்கிறார்கள்) எரித்து முடித்திருக்கிறார் இவர். 

பஞ்சாப்பிலிருந்து கிளம்பும் இந்தப் புகை, 250 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற டெல்லி வரை எட்டுகிறது. டெல்லியின் நச்சுப்புகையை மேலும் இது தீவிரப்படுத்துகிறது. பாதிக்கப்படுவது டெல்லி மட்டுமல்ல. பயிர்த்தாள் எரிப்பு, பொதுநலத்துக்கும் பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறது. வட இந்தியாவின் பல பகுதிகளை எட்டும் இந்தப் புகை லட்சக்கணக்கானோரின் உடல்நிலையை பாதிக்கிறது.

கொவிட்-19 அனைவரையும் ஆட்டிப்படைத்திருக்கும் இந்த சூழலில் பயிர்த்தாள் எரிப்பு ஆபத்துக்களை அதிகரிக்கிறது என்றே சொல்ல வேண்டும். காற்று மாசு ஏற்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள், அவர்கள் நோயிலிருந்து மீண்டுவரும் வேகமும் குறையும். வருடாவருடம் வட இந்திய விவசாயிகள் 23 மில்லியன் டன் பயிர்த்தாள்களை எரிக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

அரசுகள் இதை நிறுத்த முயற்சி செய்திருக்கின்றன. மாற்று வழிகளைப் பரிந்துரைத்திருக்கின்றன, இந்த வழக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது, பயிர்த்தாள் எரிப்பு செய்த விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது, சிலர் கைது கூட செய்யப்பபட்டிருக்கிறார்கள். நல் வழக்கங்களுக்கான பரிசுத்தொகை வழங்குவது என்கிற யுத்தியையும் முயன்று பார்த்திருக்கிறார்கள். 2019ல் உச்ச நீதிமன்றம், பயிர்த்தாள் எரிப்பு செய்யாத ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு 2400 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குமாறு வட மாநிலங்களுக்கு உத்தரவிட்டது. 

சென்ற வருடம் பயிர்த்தாள் எரிப்பு செய்யாததால், தனக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்கும் என்று அவ்தார் சிங் எதிர்பார்த்திருந்தார். 

"ஒரு வருடம் காத்திருந்தோம், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் பலரை போலவே நானும் இந்த வருடம் பயிர்த்தாள்களை எரிக்க முடிவு செய்தேன்" என்று தெரிவிக்கிறார். 

பஞ்சாப் அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இவ்வளவு விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்குவது சாத்தியமில்லை என்று அறிவித்திருந்தது. "எனக்குத் தெரிந்த எந்த விவசாயிக்கும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை" என்கிறார் விவசாயி சரண்தீப் க்ரேவால். 

பனி படர்ந்த டெல்லியின் குளிர்காலத்தில் இந்தியா கேட் பகுதியில் மேகமூட்டம் போல காட்சி தரும் புகை மாசு 

மாசு அளவு அதிகரிக்க அதிகரிக்க, தேசத்தின் விவசாயிகளுக்கும் திட்ட வரைவியலாளர்களுக்கும் நடுவே இருக்கும் இடைவெளியும் அதிகரித்துக்கொண்டே போகிறது. பல தசாப்தங்களாக அதிக உற்பத்திக்கு மானியம் கொடுத்துக்கொண்டிருந்த, உடைந்து போயிருந்த ஒரு அமைப்புக்குள் திட்ட வல்லுநர்கள் சீரமைப்புகளைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். 

அதிகமான உற்பத்தியை எப்போதுமே ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களும் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். 

1960ல் விவசாயிகளின் நலனை நோக்கி முன்வைக்கப்பட்ட முடிவுகளும் மானியங்களும் பஞ்சாபையும் ஹரியாணாவையும் உணவு உற்பத்தியில் இந்தியாவின் முக்கியப் பங்கேற்பாளர்களாக மாற்றின. ஆனால் அப்போதைய காலகட்டத்தோடு ஒப்பிடும்போது, இந்தியாவின் தானியக்கிடங்குகள் இப்போது ஓரளவு நிரம்பியே இருக்கின்றன. ஆனால் அடிப்படை அமைப்பு மாற்றப்படாததால் நிலைமையை சீராக்கும் முயற்சிகள் சர்ச்சையைத் தோற்றுவிக்கின்றன. 

செயல்படாமல் போன தீர்வுகள் 

விவசாயிகள் முக்கியமான வாக்கு வங்கிகளாக இருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. அதனாலேயே தடை, அபராதம் போன்ற நீதிமன்ற உத்தரவுகள் பெரும்பாலும் அமுல்படுத்தப்படுவதில்லை. 

"இந்த உத்தரவுகளை அமுலாக்கம் செய்கிற அரசியல்வாதிகள் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் எரிச்சலை சம்பாதிக்க வேண்டிவரும். அதனால் ஒன்றும் நடப்பதில்லை," என்கிறார் விவசாயப் பொருளியலாளர் அவினாஷ் கிஷோர். 

இது ஒருபுறமிருக்க, விவசாயிகள் இலவச மின்சாரம், நெல்லுக்கான உர மானியம் போன்ற பலவற்றையும் பயன்படுத்திவருகிறார்கள். "எந்த மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து விவசாயிகளின் நடவடிக்கைகள் மாறும். இலவச மின்சாரம், மலிவுவிலை உரங்கள் போன்றவை பிரச்சனையை உருவாக்குகின்றன" என்கிறார் விவசாயப் பொருளியலாளர் அஷோக் குலாட்டி. 

விவசாயிகளோ "டெல்லியில் இருக்கும் காற்று மாசுக்கு தூசி, தொழிற்சாலை உமிழ்வுகள், வாகன உமிழ்வுகள், எரிப்பு என்று பல காரணங்கள் உண்டு. பயிர்த்தாள் எரிப்பு என்பது அதில் ஒன்று. அவ்வளவுதான். ஆனால், பழியில் பெரும்பங்கு எங்கள் தலைமேல்தான் விழுகிறது" என்கிறார்கள்.

பருவநிலைக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. விவசாயிகள் வருடத்துக்கு இருமுறை பயிர்த்தாள்களை எரிக்கிறார்கள். கோடையின்போது நடக்கும் பயிர்த்தாள் எரிப்பில் எழுகிற புகை, வெப்பக்காற்றால் வேகமாக சிதறடிக்கப்படுகிறது. ஆனால் குளிர்காலத்தில் நடக்கிற இரண்டாவது எரிப்பின்போது, செப்டம்பரிலும் அக்டோபரிலும் இருக்கும் குறைவான வெப்பநிலையும் மிதவேகத்தில் வீசும் காற்றும் இந்தப் புகையைப் பரவலாக்கிவிடுகிறது. 

"டெல்லி காற்று மாசில் பயிர்த்தாள் எரிப்பின் பங்கு காற்றின் வேகத்தையும் திசையையும் பொறுத்தது. இது பொதுவாக 1% முதல் 42% வரை இருக்கிறது" என்கிறார் முனைவர் குலாட்டி. ஆனால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அமைச்சகத்தின அறிக்கையில் இந்த சராசரி பங்களிப்பு 2019ல் 10% இருந்தது எனவும், அது இப்போது 15% என அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாற்றுத் தொழில்நுட்பங்களை அரசு பரிந்துரைக்க முயற்சி செய்கிறது என்றாலும், அதிலும் பல பிரச்சனைகள் உண்டு. 

"ஹேப்பி சீடர்" என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு இயந்திரத்தை எடுத்துக்கொள்வோம். டிராக்டரின் மேல் அந்த இயந்திரம் பொறுத்தப்பட்டிருக்கும். சென்ற பயிரிடலின்போது மீதமிருந்த பயிர்த்தாள்களை அகற்றுவதோடு அடுத்த பயிரிடலுக்கான கோதுமையையும் விதைக்கும் ஆற்றல் கொண்டது. சுற்றுச்சூழலை பாதிக்காத, வேகமான, செயல்திறன் மிக்க இயந்திரம் என்று சொல்லப்பட்டது. தனியாகவோ குழுவாகவோ இதை விவசாயிகள் வாங்கினால், தொகையில் 50 முதல் 80% பணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு செலுத்தியது. சென்ற வருடம் இந்த இயந்திரத்தை வாங்கியதால் இப்போது பயிர்த்தாள்களை எரிக்கவில்லை என்கிறார் வசதியான பஞ்சாப் விவசாயியான இந்திரஜித் சிங். 

ஆனால் இந்த இயந்திரத்துக்கான செலவு அதிகம். டிராக்டர் இல்லாமல் இதைப் பயன்படுத்த முடியாது. இயந்திரமும் டிராக்டரும் சேர்ந்து 15,000 டாலர்கள் வரை விலை இருக்கும். "இந்த விலையைத் தரமுடியாமல் பல விவசாயிகள் பயிர்த்தாள்களை எரிக்கிறார்கள்" என்கிறார் இந்தர்ஜித். இந்த விலையைக் கொடுக்க முடிந்தவர்களுக்குக் கூட, இயந்திரம் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. நெடுங்காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது, குறைந்த எண்ணிக்கையிலேயே இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன என்று அவர்கள் சொல்கிறார்கள். 

இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, பயிர்த்தாள்கள் உட்பட பயிர் எச்சங்களை 15 முதல் 20 நாட்களுக்குள் உரமாக மாற்றுகிறது. ஆனால் விவசாயிகளோ, இரு பயிர்களுக்கிடையே அத்தனை அவகாசம் இருப்பதில்லை என்கிறார்கள். 

"கோடை காலத்தில் நெல் பயிரிட எங்களுக்கு அனுமதியில்லை. நெற்பயிருக்கு அதிக நீர் தேவை. வெப்பத்தின்போது நீரைப் பாதுகாக்கவேண்டும் என்பது இதன் அடிப்படை" என்கிற க்ரேவால், "முன்னரே விதைப்பதற்கு எங்களுக்கு அனுமதி இருந்தால், பயிர்களுக்கு நடுவே இடைவெளி அதிகமாகக் கிடைக்கும், எச்சங்களை அகற்றலாம்" என்கிறார். 

இந்தியாவுக்கு இன்னொரு விவசாயப் புரட்சி தேவைப்படுமா? 

"இந்த எல்லா முயற்சிகளுமே ஓரளவு காலத்துக்குப் பொருந்தாதவைதான்" என்கிறார்கள் முனைவர் குலாட்டி போன்ற வல்லுநர்கள். 

இந்தப் பிரச்சினையை வேரிலேயே சரிசெய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். நெல் அல்லாத பிற பயிர்களுக்கு மானியம் தரப்படவேண்டும் என்கிறார். நெற்பயிரின்போதுதான் அதிகமான பயிர்த்தாள் எரிப்பு நடக்கிறது என்று கூறும் அவர், "திட்டங்களும் நிதியும் அந்த நிலப்பரப்பில் அதிகமான காய்கறிகளையும் பழங்களையும் விளைவிப்பதற்கான மானியங்களைத் தரவேண்டும். கோதுமை அரிசியை விட இந்தியாவுக்குப் புரதச்சத்தும் வைட்டமின்களும்தான் தேவை. இது பசுமையையும் அதிகப்படுத்தும். காய்கறி, பழப்பயிர்களில் தாள்கள் குறைவு என்பதால் வெட்டவெளி நெருப்புகளும் குறையும்" என்கிறார். 

ஆனால் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டுமானால் இந்தியா முதல் படிக்கு மீண்டும் போகவேண்டியிருக்கும்.1966ல் பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்கள் இந்தியாவின் பசுமை புரட்சிக்கான முன்னோடி மாநிலங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அப்போது புதிய தொழில்நுட்பங்களாலும் அதிக உற்பத்தி தரும் விதைகளாலும் உற்பத்தி பெருக்கப்பட்டது. 

"வட இந்தியாவின் நிலப்பரப்பு நெல்லுக்கு உகந்தது அல்ல. இந்த இடத்தில் இத்தனை நெல்லை விளைவிப்பது எப்போதுமே பிரச்சனையைத்தான் உருவாக்கும்" என்கிறார் முனைவர் குலாட்டி. நெற்பயிருக்கு அதிக தண்ணீர் தேவை என்பதால் நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும் இடங்களில் அதை விளைவிப்பது எளிது. பஞ்சாப் அப்படிப்பட்ட நிலப்பரப்பு அல்ல. 

50 வருடங்கள் கழித்து இதை மீள் ஆய்வு செய்யும் வல்லுநர்கள், இதுபோன்ற தீவிர விவசாய முறைகள் காற்று மாசை உருவாக்குகின்றன எனவும், இவற்றால் வேறு பல மோசமான பின்விளைவுகளும் ஏற்படும் என்கிறார்கள். 

"இந்த மாநிலங்களில் நிலத்தடி நீர் குறைந்துகொண்டே வருகிறது. எதிர்காலத் தலைமுறையினர் பெரிய தண்ணீர் பிரச்சினையை சந்திப்பார்கள்" என்கிறார் முனைவர் குலாட்டி. 

இது சூழலுக்கும் என்று தெரிந்தும் இதை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லும் விவசாயிகள், நல்ல தீர்வுகளை அரசு தரவில்லை என்கிறார்கள். 

"நாங்கள் விவசாயம் செய்யும் முறை பல மாநிலங்களில் உள்ள லட்சணக்கணக்கானவர்களின் உடல்நலனை பாதிக்கிறது. ஆனால் இந்தப் புகை தில்லிக்கு செல்வதற்கு முன்பே அந்த விவசாயியை அது பாதித்துவிடுகிறது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்" என்று சொல்லும் க்ரேவால், இப்படி முடிக்கிறார்: 

"நாங்கள் புகையின் மையத்தில் நின்று கொண்டிருக்கிறோம், யாருக்கும் அதைப் பற்றி அக்கறையில்லை"

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி