நாற்பத்தொரு வருடங்களுக்கு

முன்னர், யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் ஆரம்பித்து நாடு முழுவதும் அரச ஆதரவுடன் இடம்பெற்ற கறுப்பு ஜூலையின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் 55ற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமைக்கு, இந்த நாட்களில் வடக்கிற்கு வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 'மன்னிப்பையேனும் கேட்கவில்லை' என தமிழ் அரசியல்வாதி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய நேரத்தில் கூட, தென்னிலங்கையில் இருந்து வேட்பாளர்களாக இங்கு வரக்கூடியவர்கள் நடந்துமுடிந்த இவ்வாறான படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்டிருக்கின்றார்களா என்றால் இல்லை. அல்லது எவராவது இவர்களுக்கு ஏதாவது நட்டஈடு அல்லது உதவிகளை வழங்கியிருக்கின்றார்கள என்றால் இல்லை."
 
1983 கறுப்பு ஜூலை படுகொலைளின்போது வெலிக்கடைச் சிறைச்சாலை மற்றும் 2000ஆம் ஆண்டு பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் உள்ளிட்ட  இலங்கையின் ஏனைய சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினவுகூரும் வகையில், 'வெலிக்கடைசிறை படுகொலை தினத்தில்' (ஜூலை 25) மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
 
இலங்கையில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களையும் இந்நாட்டு அரசாங்கங்கள் பயங்கரவாதிகளாகப் பார்ப்பதாகத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
“இந்த நாட்டில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களையுமே இந்த நாட்டின் அரசு பயங்கரவாதிகளாகவே பார்த்தது. ஆகவே நாங்கள் ஆயிரக்கணக்கக்கான மக்களை இந்த போராட்டத்தில் இழந்திருக்கின்றோம். அது மாத்திரமல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவத்தினரால், கடற்படையினரால் மேலும் பல்வேறு தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளோம். ஆகவே இந்த நிலையில், படுகொலையில் இருந்து தப்பிவந்த நாங்கள் படுகொலையானவர்களை நினைவுகூர்வது, தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் தமது உரிமைகளுக்காக போராடினார்கள் என்பதை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லும்.”
 
2024ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாகக் கொழும்பில் அறிவிப்பதற்கு முன்னதாக, ஜூலை 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ச, 41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலைக்கு தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.
 
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வட மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைபீட பீடாதிபதி எஸ்.ரகுராம்,  இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இது தவிர, 1983 கறுப்பு ஜூலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளை, டெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதே தந்தை செல்வா அரங்கில் நினைவுகூர்தது.
 
இதேவேளை, யாழ்ப்பாண வணிகர் கழகம் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து நடத்திய கறுப்பு ஜூலை நினைவேந்தலில் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.
 
25 - 27 ஜூலை 1983
 
83 கறுப்பு ஜூலை படுகொலையின் போது வெலிக்கடையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டெலோ அமைப்பின் தலைவர் உட்பட 54 தமிழ் அரசியல் கைதிகள், அவர்களைப் பாதுகாக்க அழைக்கப்பட்ட படைகள் மற்றும் சிறை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்புடன் அவர்களது அறைகளிலேயே சிங்களக் கைதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
 
1983ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி, மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்ட குட்டிமணி உள்ளிட்ட 35 பேரின் சடலங்கள் சிறைச்சாலை முற்றத்தில் உள்ள புத்தர் சிலைக்கு முன் குவிந்திருந்த நிலையில், சடலங்களுக்கு மத்தியில் உயிருடன் இருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டனர்.
 
அதன்பின்னர், மீண்டும் ஜூலை 27ஆம் திகதி, தமிழ்க் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த முதல் மாடியில் உள்ள இளைஞர் அறையை சிங்களக் கைதிகள் முற்றுகையிட்டதில், காந்திய இயக்கத் தலைவர் வைத்தியர் ராஜசுந்தரம் உட்பட 18 பேர் கொல்லப்பட்ட நிலையில், உயிருக்குப் போராடி உயிர் பிழைத்தவர்களில் தற்போதைய மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பனாகொட மகேஸ்வரன் என்கிற தம்பிப்பிள்ளை மகேஸ்வரன், ஈரோஸ் அமைப்பின் அந்தோணிப்பிள்ளை அழகிரி, காந்தி இயக்கத்தைச் சேர்ந்த எஸ். டேவிட் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
எஸ். டேவிட் இந்த அனுபவத்தைப் பற்றி பிற்காலத்தில் எழுதியதோடு, அந்தோனிப்பிள்ளை அழகிரி வெலிக்கடையில் நடந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் இத்தாலியில் உள்ள அலிதாலியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தை கடத்திய குற்றத்திற்காக வெலிக்கடை சிறையில் இருந்த சேபால ஏகநாயக்க தலைமையில் இடம்பெற்றது என, ஜேடிஎஸ் (JDS) இணையதளத்திற்கு தெரிவித்திருந்தார்.
 
டெலோ தலைவர் குட்டிமணியை நாடாளுமன்ற உறுப்பினராக முன்னிறுத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முயற்சித்த போதிலும், அவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால், அவரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க அப்போதைய சபாநாயகர் பாக்கீர் மார்க்கர் மறுத்திருந்தார்.
 
25 ஒக்டோபர் 2000 பிந்துனுவெவ
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர், பண்டாரவளை பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 41 பேரில் 27 பேர், 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி அதிகாலை வெட்டியும், குத்தியும் கொலை செய்யப்பட்டதோடு மேலும் 14ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த சம்பவத்தில் பொலிஸார் மற்றும் கிராம மக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
 
பிந்துனுவெவ படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 41 பேரில் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட 19 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவர். எஞ்சியவர்கள் பிந்துனுவெவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
 
ஜூலை 1, 2003 அன்று, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு குற்றவாளிகளையும், மே 17 2005 அன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்டது.
 
எவ்வாறெனினும் 27 கைதிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட மற்றும் 14ற்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்த, பிந்துனுவெவ படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மலையக தோட்டத் தொழிலாளர் இளைஞர்களுக்கு எதிரான வழக்கு, இன்னும் சாட்சிகள் தாக்கல் செய்யப்படாத நிலையில் இடம்பெற்று வருவதாக ஜேடிஎஸ் தெரிவிக்கின்றது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி