• ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை முஹியித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்

என்றால் அது அனைவருக்கும் தெரிந்த பள்ளிவாசலே. கல்முனைப் பிராந்தியத்தில் முக்கிய வணக்கஸ்தலங்களில் ஒன்றாகக் காணப்படும் இந்த பள்ளிவாசல் வரலாற்றுப் பெருமை மிக்கது.

இந்நிலையில், இந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பில் இப்போது ஆதரவும் அதிருப்தியுமான போக்கு அங்கு நிலவுகிறது. பெரும்பாலும் நிர்வாகத்தின் மீது அதிருப்தி கொண்டவர்களே அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட நிர்வாக சபையே தற்போதும் செயற்படுவதாகவும் ஆனால், அந்த நிர்வாகத்தைச் சேர்ந்த பலர் இன்று உயிருடன் இல்லை என்பதும் தெரிய வருகிறது.

ஆக, இந்தப் பள்ளிவாசலின் நிர்வாகமும் மரணத் தறுவாயில் உள்ளது என்பதே உண்மை. ஓர் அரசியல் சக்தியின் கை பொம்மையாக இப்போதைய இந்த நிர்வாகம் செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஸ்திரமான ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்தி நல்ல செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பல சிவில் அமைப்புகள், கல்முனை ஜம்இய்யத்துல் உலமா சபை போன்றன கடுமையான முயற்சிகளை எடுத்தாலும் முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகவே அவர்களின் நிலைமை தொடர்கிறது.

கடந்த 17 வருட காலமாக அதன் நிருவாகிகளில் ஒருவராக டாக்டர் அஸீஸ் அவர்கள் திகழ்கிறார் என்ற தனிப்பட்ட வரலாற்றுச் சாதனையே நிகழ்த்தப்பட்டுள்ளதே தவிர பள்ளிவாசலின் அபிவிருத்திகள் மற்றும் இன்னோரன்ன செயற்பாடுகள் மிகப் பின்னடைவிலேயே காணப்படுகின்றன.

இதன் பின்னணியில் ஓர் அரசியல் சக்தி செயற்படுவதாக பலரும் அதிருப்தியுடன் பேசிக்கொள்கிறனர். தனது கல்முனை அரசியல் இருப்புக்கு இதனை ஒரு துரும்பாக குறித்த அரசியல் சக்தி பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

பள்ளிவாசலின் நன்மை கருதி புதியதொரு நிர்வாகத்தை தெரிவு செய்தால் அது தனக்கு எதிரான சக்திகளைக் கொண்ட குழுவாக மாறும் என்ற அச்சமும் அதனால் தனது அரசியல் இருப்பு மேலும் கேள்விக்குறியாகி விடும் என்ற ஏக்கமும் அந்த அரசியல் சக்திக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல சிவில் அமைப்புகள், கல்முனை ஜம்இய்யத்துல் உலமா சபை போன்றன முன்னெடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து இன்று சுயநல அரசியல் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

புதிய நிர்வாகம் ஒன்றை ஸ்தாபிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் வக்பு சபை, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மற்றும் அது சார்ந்த அமைச்சர் என பலரிடம் எடுத்துக் கூறியும் ஒன்றுமே நடக்கவில்லை. இதற்கான காரணம் குறித்த அரசியல்வாதியின் கடுமையான மற்றும் பரிதாபகரமான தலையீடுகள், அழுத்தங்கள், வேண்டுகோள் என்றே கூறப்படுகிறது.

எது எப்படியிருப்பினும் இவ்வாறான செயற்பாடுகள் இன்று குறித்த அரசியல் சக்திக்குச் சாதமாக அமைந்தாலும் எதிர்காலத்தில் அந்த அரசியல் சக்தி அனைத்துக்கும் விலை கொடுக்க நேரிடும் என்பது மட்டும் உண்மை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி