இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய விடயமாக நீடித்து வரும் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் விவகாரம்

தொடர்பில் தமது துருப்புச் சீட்டை நாடாளுமன்றத்தில் நேற்றுத் தூக்கி அடித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

இந்தத் தாக்குதல் தொடர்பில் நீதி, நியாயமான விசாரணைகள் நடைபெறவில்லை, உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிப்பதற்கு நேர்மையான விசாரணைகள் நடைபெறவில்லை, ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் உண்மைகளை மூடி மறைப்பதில் தீவிரமாக இருக்கின்றார்கள் என்ற எண்ணப்பாங்கே - கருத்து நிலையே - பொதுவாக மக்கள் மத்தியில் நீடித்து வருகின்றது.

ஒரு வகையில் அதுதான் யதார்த்தப் புற உண்மையும் கூட. கிறிஸ்தவ மக்களின் மதத் தலைவரான கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கூட இந்த விடயத்தை வாய் ஓயாமல் பல தடவைகள் வெளிப்படையாகவும், துணிச்சலாகவும், அப்பட்டமாகவும் வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இந்த விடயத்தை ஒட்டி அரசு என்ன செய்யப் போகின்றது என நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அரசிடம் விவரமான கேள்விகளைத் தொடுத்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

அவற்றுக்கு நேர் சீரான பதில் எதுவும் அரசு தரப்பில் இருந்து பொறுப்பான முறையில் வராத நிலையில் வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் ஜனாதிபதியாகத் தெரிவானால் இந்த விடயம் குறித்து தாம் என்ன நடவடிக்கையை எப்படி எடுப்பார், விடயத்தை எப்படிக் கையாள்வார் என்பவற்றைக் கால அட்டவணையோடு நேற்று நாடாளுமன்றத்தில் தெளிவாகவும் விரிவாகவும் வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும் விவரித்து இருக்கின்றார் அவர்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து ஸ்கொட்லண்யார்ட் பொலிஸ் மூலம் விசாரிப்பேன் என்று முன்னர் புளுகிய ரணில் விக்கிரமசிங்க, இப்போது ராஜபக்ஷக்களின் தயவில் ஜனாதிபதியாகி, அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ராஜபக்ஷக்களின் தயவில் சஜித் அடித்த துருப்புச் சீட்டு தங்கி நிற்கின்றமையால் ராஜபக்ஷக்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு விரல் நீளும் இந்த விடயத்தை, நிலவிரிப்புக்குள் போட்டு மூடி மறைத்து அமுக்க எத்தனிக்கின்றார்.

சஜித்தின் நேற்றைய நாடாளுமன்றக் கூற்றுப்படி - புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாதங்களுக்குள் 1948ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், 7 முதல் 9 தேசிய மற்றும் சர்வதேச அங்கத்தவர்களைக் கொண்ட ஓர் ஆணைக்குழு நியமிக்கப்படும். இதன் மூலம் கடந்த கால மற்றும் தற்போதைய காலகட்டத்தின் முழுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும்.

எந்தவொரு நிறுவனத்திலும் எந்தவொரு நபரிடமும் எவ்வித தடையுமின்றி வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள இவ்வாணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும்.

ஆணைக்குழுவை நிறுவிய 6 வாரங்களுக்குள் அதனுடன் இணைந்து பணியாற்ற ஸ்கொட்லண்யார்ட், எவ்.பி.ஐ வெளிநாட்டுப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புச் சேவைகள், தேசிய புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு தரப்புகளைக் கொண்ட நிரந்தர விசாரணை அலுவலகம் நிறுவப்படும். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகளுக்கு உட்பட்டு இலங்கையின் சட்டங்களின் கீழ் குற்றப்பத்திரிகைகளைச் சமர்ப்பிப்பது அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டமா அதிபருக்குக் கட்டாயமாக்கப்படும்.

1948 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கவிசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 7 (2) அல்லது பிரிவு 24 திருத்தப்படும். மேற்கண்ட குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது தீர்ப்பு வழங்க நிரந்தர உயர்நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும். இதற்காக 1978ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை கட்டமைப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமா அதிபரை சாராத அரச தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலமும் கொண்டுவரப்படும். - என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின் உள்சூக்குமங்களை பிறிதொரு நாளில் பார்ப்போம்.

நன்றி – காலைமுரசு (மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனால் எழுதப்படும் இரகசியம் – பரகசியம் பத்தி)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி