ஜனாதிபதித் தேர்தல் நெருங்க நெருங்க, நாட்டில் புதிய புதிய அரசியல் கூட்டணிகள் எல்லாம் உருவாகத் தொடங்குகின்றன. எதிரும்

புதிருமாக நின்றவர்கள் கூட தத்தமது அரசியல் இருப்பைத் தக்க வைப்பதற்காக ஓரணியில் கூட்டு சேர விழைகின்றார்கள்.

இதனைத் தென்னிலங்கை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று பேச்சு வழக்கு மொழியில் ஒப்பீடு செய்திருக்கின்றது.

கீரியும் நாகப்பாம்பும் இயற்கை எதிரிகள். பெருவெள்ளம் போன்ற பேராபத்து நேரும்போது அவை தமக்கு இடையேயான சண்டையை நிறுத்திவிட்டு, மிதக்கும் எதையாவது ஒன்றாகப் பற்றி கொண்டு, சமநிலை அழிந்து விடாமல் இருக்க தங்களுக்குள் இணக்கம் பேணித் தப்ப முயலும் என்று நமது நாட்டில் பொதுவாக ஊர்களில் கூறப்படுவதுண்டு.

நமது அரசியல்வாதிகள் பலரும் கூட இப்போது தமக்கு ஏற்பட்டுள்ள பெரு நெடுக்கடியில் இருந்து - பொதுமக்களின் கோப வெள்ளச் சீற்றத்தில் இருந்து - தங்களைக் காப்பதற்காக தங்களுக்குள் உள்ள எதிரித் தன்மையை மறந்து, ஒன்று பட்டு நிற்கின்றார்கள் என்று அப்பத்திரிகை கூறுகின்றது.

உண்மைதான். புதிது புதிதாக உருவாகும் கூட்டுக்கள் பலவும் அப்படியான எண்ணத்தைத்தான் தருகின்றன. 2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவதற்குப் பின்புலத்தில் உழைத்தவர்களில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

ஆனால் தேர்தலில் வெற்றியீட்டி, அதனைப் பயன்படுத்தி சுதந்திரக் கட்சியின் தலைமையையும் கைப்பற்றிக் கொண்ட மைத்திரிபால சிறிசேன, அதன் பின் எல்லோரையும் புறமொதுக்கி, உதாசீனப்படுத்தி, தூக்கியெறிந்து நடந்தார்.

சந்திரிகாவையும் செல்லாக் காசாக்கிச் செயல்பட்டார். அதனால் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் வெடித்தன. சுதந்திரக் கட்சியை அடியோடு அழித்தவர் மைத்திரி என்று கட்சியின் மீது குடும்ப ரீதியான பாத்தியத்தைக் கொண்டிருந்த சந்திரிகா வைத்துகொண்டு இருந்தார்.

இப்போது மீண்டும் தேர்தல் நெருங்கும் சமயம். 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில்' இருக்கும் சுதந்திரக் கட்சி தன்னைச் சரியாக இம்முறை நிலைநிறுத்தாமல் விட்டால் அது அரசியலில் காணாமலேயே போய்விடும் என்பது திண்ணம்.

பொது மக்களின் கோப வெள்ளத்தை எதிர்கொள்வதற்காகக் கீரியும் பாம்புமாக இருந்த சந்திரிகாவும் மைத்திரிபால சிறிசேனவும் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து, ஒதுக்கி வைத்துவிட்டு, ஓர் அணியில் இணைந்து செயல்படத்தயாராகி விட்டனர்.

2011 இல் நீர்கொழும்பில் நிமல் லான்ஸாவின் பிரதேசத்தை விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைத்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாகத் தலையிட்டு விசேட அதிரடிப்படையினரை விலக்கினார். அது மட்டுமல்ல, நிமல் லான்ஸாவைச் சமாளிப்பதற்காக உடனடியாக விசேட ஹெலிக்கொப்டர் எடுத்துக்கொண்டு கொழும்பிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் ஆலோசகரும், சகோதரரும், அமைச்சருமான பஸில் ராஜபக்ஷவும் நீர்கொழும்புக்கு நேரில் பறந்து சென்றனர்.

நிமல் லான்ஸாவை வாரிக் கட்டி அணைத்து, அவரைத் தாஜா செய்தனர். அச்சமயம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதனை 'நீர்கொழும்பு நாடகம்' என்று விமர்சித்து, எள்ளி நகையாடியிருந்தார்.

கடைசியில் இப்போது என்ன நடக்கின்றது? ராஜபக்ஷக்களின் மொட்டுக் கட்சிப் பட்டியலில் நாடாளுமன்றுக்கு வந்து, கோட்டாபயவின் காலத்தில் அவருக்கு பக்கத்தில் நின்று பணிவிடை புரிந்த நிமல் லான்ஸா இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக புதுக் கூட்டணி அமைக்கின்றார். ராஜபக்ஷக்களின் மொட்டுக் கூட்டணியில் இருந்து தாம் வெளியேறியமை மட்டுமல்லாமல், ஏனைய பலரையும் அங்கிருந்து உடைத்துப் பிரித்து ரணில் பக்கம் இழுக்க முயல்கின்றார்.

ராஜபக்ஷக்களை மோசமாக வைகின்றார்.அன்று ரா ஜபக்ஷக்களின் நீர் கொழும்பு நாடகத்தில் பிரதான நடிகர் எனத் தாம் வர்ணித்த நிமல் லான்ஸாவைத் தனக்கான அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு களத்தில் இறக்கியிருக்கின்றார் ரணில் விக்கிரமசிங்க.

முன்னர் கீரியும் பாம்புமாக இருந்தவர்கள் மக்களின் கோப வெள்ளத்துக்குப் பயந்து ஒரு மேடையில் ஏற முயற்சிக்கின்றார்கள். இந்த போக்கில் பார்த்தால் இலங்கை அரசியலில் கீரியும் பாம்புமாக இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவும் கூட தேர்தல் நெருக்கடியை சமாளிப்பதற்காக ஒரு மேடையில் ஒன்றாகத்தோனறி, அரசியலில் பயணிப்பதற்கு முயன்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதுதான் நிலைமை.

-காலைமுரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி