தேர்தலை நடத்துங்கள், தேர்தலை நடத்துங்கள் என்று, எதிரணியினர் நீண்ட நாட்களாகவே கோரிவந்தனர். முதலில்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலைக் கோரிய அவர்கள், பின்னர் ஏதாவது ஒரு தேர்தலை நடத்துங்கள் என்ற நிலைமைக்கு இறங்கினர். இதற்காக அவர்கள் நீதிமன்றத்தை நாடியக போதிலும், அது பலனளிக்கவில்லை.

ஆனால் தற்போது காரியம் கைகூடி வந்துவிட்டது. அடுத்தாண்டு ஓகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. இறுதியாகக் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் கூட்டத்தின்போதும், தேர்தல் தொடர்பான குறிப்பொன்றை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். நத்தாரை சிறப்பாகக் கொண்டாடிவிட்டு, ஜனவரி முதல் தேர்தலுக்குத் தயாராகுமாறும் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதன்படி, எதிர்வரும் தேர்தல்களுக்கான மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் அமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு, ஐக்கிய தேசியக் கட்சியினால் பல தரப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், தேர்தலை இலக்கு வைத்து புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த Game Plan, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அடுத்தாண்டுக்காக முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலவச உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வை, பெப்ரவரி 4ஆம் திகதியன்று தம்புளையில் உற்சவமாக நடத்தவும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திடம் சரியாக நடைபெறவில்லை என, ஜனாதிபதி விக்கிரமசிங்க மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் என்றும் தெரியவருகிறது.

கடந்த காலங்களில், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அமைப்பு மிகவும் மந்தகதியில் இருந்தது. இருப்பினும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய முறைமையின் கீழ் கட்சியின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்று, கட்சியின் செயலாளர் ரங்கேபண்டார  தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களை நல்லிணக்கப்படுத்தும் வகையிலான கிறிஸ்மஸ் விருந்து ஒன்றை ரவி கருணாநாயக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான பொறுப்பு, ரவியின் மனைவி திருமதி மேலாவிடம் ஜனாதிபதி கையளித்துள்ளார் என்று தெரியவருகிறது.

எவ்வாறெனினும், எத்தகைய மறுசீரமைப்புகள் தொடர்பில் பேசப்பட்டாலும், கட்சிகள் உருவானாலும், ஐதேகவோ அல்லது ஐமசவோ தனித்தனியாக சென்று வெற்றிபெற முடியாதென, அக்கட்சியின் சிலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைக்கும் முயற்சியை ஆரம்பிக்குமாறு, இரு கட்சிகளினதும் முக்கியஸ்தர்கள் சிலர், மலிக் சமரவிக்கிரமவிடம் கோரியுள்ளனர்.

கிடைத்துள்ள தகவல்களின்படி, மலிக் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது மாத்திரமன்றி, அதற்காக மேலும் சிலரையும் இணைத்துக்கொண்டுள்ளாராம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு நெருக்கமானவரான மலிக் சமரவிக்ரம, நல்லாட்சி அரசாங்கத்தின் போது அமைச்சராக இருந்தவர்.

இந்நிலையில், இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் குறிப்பிட்டதொகை உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனராம். எனினும், ஐமச தலைவர் சஜித், இது தொடர்பாக இன்னும் இறுதி நிலைப்பாட்டுக்கு வரவில்லையாம். “தனியாக நின்று வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற நிலையில், ஒவ்வொருத்தர் பி்ன்னால் செல்லவேண்டிய தேவையில்லை” என்று, சஜித்வாதி சிலர் தெரிவித்துள்ளனர்.

"எங்கள் தலைவரைப் பற்றி சிறிகொத்தவில் பொய்களைப் பரப்பும்போது, அவர்களுடன் எங்களுக்கென்ன பேச்சு இருக்கிறது” என்று, ஐமசவின் இளம் எம்பிக்கள் குறிப்பிட்டுள்ளனர். சஜித் பற்றிய போலிச் செய்தியொன்று, ஒரே விதமாக ஞாயிறு வாரஇதழ் பத்திரிகைகள் இரண்டில் பிரசுரிக்கப்பட்டிருந்தன என்றும் அந்தச் செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, பொய் என்ற  அறிவிப்புக்கும் வழங்குமாறு, ஐமச பொதுச் செயலாளரால் அப்பத்திரிகைகளிடம் கோரப்பட்டுள்ளன.

“ரஞ்சித் மத்துமபண்டாரவுடன் அரசாங்கத்திற்கு 20” என்ற தலைப்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் அருண மற்றும் தேஷய பத்திரிகைகளில் சமமான இரண்டு பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்று, ஐமசவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ‘அருண” மற்றும் ‘தேஷய” பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் நடத்தை குறித்து எம்பிக்கள் தன்னுடன் எந்த உரையாடலும் நடத்தவில்லை என்று ஐமச பொதுச் செயலாளர் கூறுகிறார்.

இவ்வாறாயினும், மலிக்கின் திட்டம் செயற்பட வேண்டுமானால், சஜித் மற்றும் கிரியெல்லவுக்கு எதிரான கோப்பு வெளியே எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிலர் கூறுகின்றனர்.

இரு கட்சிகளையும் கொக்கி போட்டோ அல்லது தூண்டில் போட்டோ ஒன்றிணைக்க நினைக்கும் சிலர்தான் அவ்வாறு கூறுகிறார்கள் போல. எனினும், ஐதேகவை உடைத்துக்கொண்டு ஐமச உருவான விதம் தொடர்பில் சஜித்துக்கு நினைவிருக்கலாம். ஏனென்றால், ஐமசவை உடைத்து ஐதேகவை பலப்படுத்தும் திட்டங்களே தற்போது உக்கிரம் பெற்றிருக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி