உலகளவில் அதிகளவிலான பெண்கள் உயிரிழப்பது மாரடைப்பு உள்ளிட்ட இதய மற்றும் குருதிக்குழாய் நோய்கள் (Cardiovascular Diseases) காரணமாகவே ஆகும். எவ்வாறாயினும், தமது உயிரைப் பறிக்கும் பிரதான எதிரி இதய நோய்களே என்பதை பெண்களில் பாதியளவிற்கும் குறைவானவர்களே அறிவர் என அமெரிக்க இதய சங்கத்தின் (AHA) தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பலரும் பெண்களின் ஆரோக்கியத்தை மகப்பேறு மற்றும் இனப்பெருக்கப் பராமரிப்புடன் மாத்திரம் எல்லைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே பார்க்கின்றனர். எவ்வாறாயினும், ஒரு பெண்ணின் ஆரம்பக் குழந்தைப்பருவம் முதல் முதிர்வயது வரையிலான ஹார்மோன் மாற்றங்கள் அவளது இதயத்தின் செயற்பாட்டுடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை நவீன மருத்துவ அறிவியல் வலியுறுத்துகிறது.

இதயம் வழங்கும் முன் எச்சரிக்கைகள்
ஒரு பெண்ணின் முதலாவது மாதவிடாய் வயது பத்து வயதிற்கு முன்னர் ஏற்படுதல், சீரற்ற மாதவிடாய் சுழற்சி அத்துடன் மன அழுத்தம் மற்றும் தூக்கத்தைப் பாதிக்கும் மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறி (PMS) என்பன புறக்கணிக்கப்படக் கூடாதவை ஆகும்.
குறிப்பாக நாற்பது வயதிற்கு முன்னர் இயல்பாகவே மாதவிடாய் நின்ற நிலையை (Premature Menopause) அடையும் பெண்களுக்கு, பிற்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து சுமார் 40% இனால் அதிகரிக்கிறது. அதேபோன்று கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் குருதி அழுத்தம் (Preeclampsia) என்பது பிற்கால இதய ஆபத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தும் ஒரு இயற்கையான 'ஸ்ட்ரெஸ் டெஸ்ட்' (Stress Test) போன்றதாகும்.

வாழ்க்கையின் நான்கு பிரதான மைல்கற்கள்
அமெரிக்க இதய சங்கம் உள்ளிட்ட முன்னணி மருத்துவ அமைப்புகள் ஒன்றிணைந்து ‘Circulation’ மருத்துவ இதழின் ஊடாக அறிமுகப்படுத்திய புதிய கட்டமைப்பானது, பெண்ணின் வாழ்க்கையை நான்கு பிரதான கட்டங்களாகப் பிரித்துக் காட்டுகின்றது:
-
முதலாவது மாதவிடாய் ஏற்படும் கட்டம் (Early Transition)
-
இனப்பெருக்க மற்றும் கர்ப்ப காலப்பகுதி (Ovarian Cycling & Pregnancy)
-
மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய இடைமாற்றுக் கட்டம் (Perimenopause)
-
மாதவிடாய் நின்ற பிந்தைய கட்டம் (Postmenopause)
ஒரு பெண் தனது வாழ்க்கையில் சுமார் 40% காலப்பகுதியை மாதவிடாய் நின்ற பின்னரே செலவிடுகின்றாள். எனவே மாதவிடாய் நின்றவுடனேயே ஹார்மோன் தொடர்பான உரையாடல்களை முடிவிற்குக் கொண்டுவராது, கொலஸ்ட்ரால் மற்றும் இதய ஆரோக்கியப் பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வது அத்தியாவசியமான காரணியாகும்.

தனித்தனிப் பிரிவுகள் அல்ல, ஒரே ஆரோக்கிய வலையமைப்பு
பெண்கள் பிறப்பியல்/மகப்பேறு பிரச்சினைகளுக்கு ஒரு மருத்துவளையும், மன அழுத்தத்திற்கு வேறொரு ஆலோசகரையும், உயர் குருதி அழுத்தத்திற்கு இதய நோய் நிபுணரையும் சந்திப்பது சாதாரண வழக்கமாகும். இதன்போது ஒரே உடலின் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்ட அறிகுறிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு ஆராயப்படும் நிலையே ஏற்படுகின்றது.
மருத்துவ ஆராய்ச்சிகளில் பெண்களின் பங்களிப்பு இன்னும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவது இந்த இடைவெளியை மேலும் விரிவுபடுத்துகிறது. இதற்கான தீர்வாக அமைவது, அனைத்து விசேட மருத்துவப் பிரிவுகளும் ஒன்றிணைந்து ஒரு பெண்ணின் முழுமையான வாழ்க்கைச் சுழற்சியையும் ஒரே முறைமையாகப் பார்ப்பதாகும்.
நம்பகமான மூல இணைப்புகள்:


