ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை தாக்குதல் நடத்த இலங்கையின் மத அடிப்படைவாத முரண்பாடுகள் காரணம்  என கடந்த ஆறு மாத

காலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தாக்குதலை தடுக்காது போனமைக்கு  அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரும், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளினுள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், தேசிய புலனாய்வு பிரதானி மற்றும் இராணுவப் புலனாய்வு பணிப்பகத்தினர் ஆகியோர் தமது பொறுப்புகளை தவற விட்டுள்ளனர். 

மேலும் இந்த ஆண்டு இறுதி காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் நாட்டில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்குவதற்கான தன்னல அக்கறைகளை கொண்டவர்கள்  புலனாய்வு தகவல்கள் தொடர்பாக செயற்படவில்லையா என்பது புரிந்து கொள்வதற்காக மேலும் விசாரணைகள் தேவைப்படும். 

அப்போது அத்தகைய ஒரு நிலைமை இத்தகைய பயங்கரவாத செயல்களை கட்டுப்படுதத்துவதற்கான  ஒரு பலமான ஆட்சி மாற்ற கோரிக்கைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் தெரிவுக்குழு அந்த அறிக்கையில் அவதானப்படுத்தியுள்ளது. 

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அறிக்கை இன்று  பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலை அடுத்து அதனை கண்டறிய நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு கடந்த ஆறு மாதங்களாக தமது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் இன்று புதன்கிழமை தமது விசாரணை அறிக்கையை சபையில் சமர்ப்பித்தனர். தெரிவுக்குழுவின் பிரதித் தலைவர் ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவுக்குழு அறிக்கையை சபைப்படுதினார், 

இந்நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. 

இதில் தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், ரவூப் ஹகீம், நலிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களின் மூலமாக தெரிவுக்குழு அறிக்கை தெளிவுபடுத்தப்பட்டது. 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் மூன்று தேவாலயங்கள், மற்றும் மூன்று ஹோட்டல்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஆகக்குறைந்தது 277 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 40 வெளிநாட்டவர்கள், 45 குழந்தைகள் உள்ளடக்கப்பட்ட எண்ணிக்கையாகும். அத்துடன்  400க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி