கொரோனா தொற்று காரணமாக தனியாகவும் குழுவாகவும் கலந்துரையாட முடியாமற்போனமையால், சில விடயங்களில் தௌிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் இன்று மாலை வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை, அரசியல் யாப்பினூடாக பெறுவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான குறிக்கோள் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கமும் தலைவர்களும் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தௌிவாகவும் உறுதியாகவும் உள்ளதாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கு சில சக்திகள் முயற்சிப்பதாகவும் ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முழுமையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி, அரசியல் யாப்பினை உருவாக்க நாடு முயற்சிக்கும் தருணத்தில், ஒற்றுமையை பேணுவது அடிப்படையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் தௌிவு இருக்க வேண்டுமே தவிர, அவர்களை குழப்பக்கூடாது எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்ட, பிளவுபடாத நாட்டிற்குள் சமத்துவம், நீதி மற்றும் சுய கௌரவம் என்பனவற்றின் அடிப்படையில் தீர்வினை எட்டும் குறிக்கோளில் உறுதியாக பயணிப்பதற்கு தௌிவின்மைகளையும் குழப்பங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி