யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன
எனத் தான் கருதுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் இடம்பெற்றிருந்தன.
சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கு விசாரணை
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுகளின் இடைக்கால அறிக்கையை 15ஆம் திகதிக்கு (நேற்று) முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா கடந்த 10ஆம் திகதி கட்டளை ஒன்றை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினுடைய அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான சுருக்கமான விவரங்கள் மன்றுக்கு நீதிவானால் வெளிக்கொணரப்பட்டது. ராஜ் சோமதேவாவின் அறிக்கையில் முக்கியமாக மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள்
முதலாவதாக செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன எனத் தாம் கருதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுவது போன்று புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இது சம்பந்தமான மேலதிகமான ஆய்வுகள் தேவை போன்ற முக்கியமான மூன்று விடயங்கள் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.